கிருஷ்ணகிரி: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.19 ஆயிரம் கோடி மதிப்பில் நாடு முழுவதும் 553 ரயில் நிலையங்களை நவீனமயமாக்க, பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக நேற்று முன்தினம் (பிப்.26) அடிக்கல் நாட்டினார்.
இந்த திட்டத்தின் கீழ் ஓசூர் ரயில் நிலையம் மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி எம்.பி செல்லக்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நரசிம்மன் மற்றும் மாவட்ட பாஜக, காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து ஓசூர் ரயில் நிலையத்தில் கல்வெட்டு திறக்கப்பட்டது. இதனைக் கிருஷ்ணகிரி எம்.பி செல்லக்குமார் திறந்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நரசிம்மன், ரயில்வே அதிகாரிகளை அழைத்து, காங்கிரஸ் குறித்தும் காங்கிரஸ் எம்பி குறித்தும், தரகுரைவாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், இனிமேல் காங்கிரஸ் எம்பியை அழைத்து நிகழ்ச்சியை நடத்தினால் நாங்கள் வர மாட்டோம் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இன்று(பிப்.28) ஓசூர் டிஎஸ்பி அலுவலகத்தில் பாஜக நிர்வாகியான நரசிம்மனை கைது செய்யக்கோரி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் முரளிதரன் தலைமையிலான காங்கிரசார் புகார் அளித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, "கடந்த 26ஆம் தேதி பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள 553 ரயில் நிலையங்களை நவீனமயமாக்க காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சி ஓசூர் ரயில் நிலையத்திலும் நடந்தது, இதில் சிறப்பு விருந்த கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமார் கலந்து கொண்டார், அவருடன் மாவட்ட நிர்வாகிகளான நாங்களும் கலந்து கொண்டார். அந்த சமயத்தில் தாமகவின் முன்னாள் எம்பியும், தற்போதைய பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளருமான நரசிம்மனும் கலந்து கொண்டார்.
திடீரென அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை காங்கிரஸ் எம்பியை, காங்கிரஸ் கட்சியினிரை தரக்குறைவாகப் பேசியுள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். மேலும் இது குறித்து மாவட்ட எஸ்பியை சந்திக்கவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காங்கிரஸ் நிர்வாகிகளை 'நாய்' என ஒருமையில் பேசிய பாஜக நிர்வாகி.. ஓசூர் அரசு விழாவில் நடந்தது என்ன?