சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 50 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 28 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 15 பேர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் மூவர் என இதுவரை மொத்தமாக 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 66 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 16 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 31 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு தலைமை மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 115 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் இதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக கள்ளக்குறிச்சியில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "எந்த சாராயம் தன்னை மறந்து இருக்க செய்கிறதோ அதே சாராயம் தான் உயிரிழப்புக்கும் காரணமாக அமைக்கிறது எனத் தெரிவித்தார். நல்லச்சாராயம் குறைக்கப்படவேண்டும் என்றும் கள்ளச்சாராயம் அழிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் சாராயத்தால் உயிரிழந்தவர்களின் சந்ததிகளுக்காக இரங்கல்கள் தெரிவிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் விற்பனையான சரக்கு மரக்காணம் சரக்கா? விசாரணையில் திடுக்கிடும் பின்னணி