சென்னை: தமிழ்நாடு சட்ட்மன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை பல்வேறு தீர்மானங்கள், சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
அந்த வகையில், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் மதுவிலக்கு திருத்தச் சட்டம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அவசரமாக திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு திருத்தங்கள் தேவைக்கேற்ப கொண்டு வரப்படும். இன்னும் கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையில் கடுமையான திருத்தங்களும் கொண்டு வரப்படும். ஒரு மதுபானக் கடையை மூடினால் அடுத்த கடைக்கு போகிறார்கள்.
எங்களைப் பொறுத்தவரை படிப்படியாக பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம். இந்த சட்டத் திருத்தம் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த பயன்படும். பூரண மதுவிலக்கு கொண்டு வருவதற்கு அரசியலுக்கு அப்பாற்ப்பட்டு, என்ன பிரச்னைகள் இருக்கிறது என்பது சட்டமன்ற உறுப்பினர்கள் கூற வேண்டும்” என்றார்.