கோயம்புத்தூர்: தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் நிலையில், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் தொலைபேசி எண்கள் சேகரிக்கப்படுவது தேர்தல் விதிமீறல் எனவும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திராவிடர் பண்பாட்டுக் கூட்டியக்கத்தைச் சேர்ந்தவர்கள் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து திராவிடர் பண்பாட்டுக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வெண்மணி கூறியதாவது, “தேர்தல் நடைமுறை விதிகள் நாடு முழுவதும் அமலில் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதா லட்சுமி, பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற மாணவ, மாணவிகளின் வாக்காளர் அட்டை விவரங்களை ஆன்லைன் மூலமாக சேகரித்து வருகிறார்.
எதற்காக வாக்காளர் அட்டையின் விவரங்களை கேட்கிறீர்கள் என்று மாணவர்கள் கேட்டதற்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் உத்தரவின் பெயரில் மாணவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டையின் எண், ஆதார் விவரங்களை சேகரிக்கப்பதாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் மாணவர்களின் வாக்காளர் விவரங்களை உள்நோக்கத்துடன் கேட்கின்றனர். இது தேர்தல் விதிமுறை மீறல் என்பதால், தமிழ்நாடு ஆளுநர் மற்றும் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் துறைத் தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் நடத்தை அலுவலரிடம் புகார் அளித்துள்ளோம்.
ஏற்கனவே, தமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்களில் ஆளுநர் கூறிய தகவலின் அடிப்படையில் தகவல்களை சேகரிக்கின்றோம் என்று புகார் வந்து அவை திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஆளுநர் மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜக அமைப்பிற்கு சாதகமாக பல்வேறு விதமான அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இது சட்டப்படி தவறு என்று தெரிந்தும், தொடர்ந்து மத்திய அரசிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு மாணவ, மாணவிகளிடம் வாக்காளர் அட்டை எண் மற்றும் தொலைபேசி எண்களை சேகரிப்பது சட்டத்திற்கு புறம்பானது. எனவே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீதும், வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதா லட்சுமி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தல் 2024: 18 தொகுதிகளில் நேரடியாக மல்லுக்கட்டும் திமுக - அதிமுக.. முக்கிய புள்ளிகள் யார் யார்? - Admk Vs Dmk Candidates