ராணிப்பேட்டை: மாவட்டம், வாலாஜா வெத்தலக்காரன் தெருவை சேர்ந்தவர் சலாவுதீன் மகன் முகமது சபி. இவர் வாலாஜா பேருந்து நிலையம் அருகே இரண்டு செல்போன் கடைகளை நடத்தி வருகிறார். இதில், மொபைல் உதிரி பாகங்கள், இரண்டாம் தர மொபைல்கள், ஓஎல்எக்ஸ் உட்பட பல்வேறு சமூக வலைதளம் மூலம் மொபைல் வாங்கி அதனை புதுப்பித்து விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் லிங்கேஷ் என்பவரது மகன் தனவந்தன் (22) சென்னை ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இவர், முகமது சபி ஓஎல்எக்ஸ் மூலம் ஐபோன் ஒன்றை 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்காக உள்ளதாக போட்டுள்ளதை பார்த்துள்ளார்.
அப்போது, தனவந்தன் அந்த ஐபோனை 9 ஆயிரம் ரூபாய்க்கு கொடுக்குமாறு ஓஎல்எக்ஸில் ஆடியோ சேட் செய்துள்ளார். அந்த ஆடியோவில், நபிகள் நாயகத்தை இழிவு படுத்தியும், இஸ்லாமியர்களை குறித்து தகாத வார்த்தைகளால் வசை பாடியதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: திருவேற்காடு கோயிலில் ரீல்ஸ் எடுத்த விவகாரம்: "சாமி மீது பயம் வேண்டாமா?" - நீதிபதி கண்டனம்!
இந்த ஆடியோக்களை கேட்ட முகமது சபியின் தந்தை சலாவுதின், இணைய வழி குற்றப்பிரிவு மூலம் புகார் செய்துள்ளார். அதனை தொடர்ந்து வாலாஜா காவல் நிலையத்தில் புகார் பெற்றுக்கொள்ளப்பட்டு தனவந்தனை கைது செய்த போலீசார் அவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும், வாலாஜா முஸ்லிம் ஜமாத் அமைப்பின் மூலமாக நபிகள் நாயகத்தை இழிவு படுத்திய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் ஒரு புகார் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓஎல்எக்ஸ் தளத்தில் பொருட்களை விற்பனை செய்து வந்த நபரிடம் கல்லூரி மாணவன் தகாத முறையில் மதத்தை இழிவுபடுத்தி பேசி கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்