கோயம்புத்தூர்: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்ந்து மொத்தம் 11 உறுப்புக் கல்லூரிகளில் 33 துறைகளில் முதுநிலைப் படிப்பு மற்றும் 28 துறைகளில் முனைவர் பட்டப் படிப்பையும் வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த பல்கலைகழகத்தின் 2024-2025 கல்வி ஆண்டுக்கான முதுநிலை மற்றும் முனைவர் பட்ட மேற்படிப்பு சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் கடந்த மே 8ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு, ஜூன் 23ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த நுழைவுத் தேர்வுக்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2,881 இளநிலைப் பட்டம் பெற்ற வெவ்வேறு பாடப்பிரிவு படித்து வந்த மாணவ மாணவியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்கிடையே, விண்ணப்பங்கள் தரப்பட்ட பெரும்பாலான மாணவ, மாணவியர் தங்களது இளநிலை பட்டப்படிப்பு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தான் முடிய உள்ளது. அதனால் இந்த முதுநிலைப் படிப்பு மாணவர் சேர்க்கையை தள்ளி வைக்குமாறும் கோரிக்கை வைத்தனர்.
இதன் காரணமாக கோரிக்கை விடுத்த இளநிலை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பல்கலைக்கழகம் ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2024-2025 கல்வி ஆண்டுக்காக ஏற்கனவே நடத்தப்பட்ட முதுநிலை மற்றும் முனைவர் பட்டமேற்படிப்பு சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புகள் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 5 தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி.. 6 மாவட்டங்களில் தொடங்குவதில் சிக்கல்