கோயம்புத்தூர்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ஆல்வின். பிரபல ரவுடியான இவர் மீது குமரி உள்பட பல்வேறு இடங்களில் கொலை முயற்சி வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கோவையில் ரவுடி சத்தியபாண்டி என்பவரை கொலை செய்தது தொடர்பான வழக்கு உள்ளது. இதன்படி, அரவுடி சத்தியபாண்டி கொலை வழக்கில் இரு மாதங்களாக கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த நிலையில், ஆல்வினுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்நிலையில், கொடிசியா அருகே ஆல்வின் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இன்று அதிகாலை பந்தய சாலை போலீசார் அவரைப் பிடிக்க முயன்றனர். உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சென்றபோது, அவர்கள் மீது ரவுடி ஆல்வின் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் தலைமைக் காவலர் ராஜ்குமார் கையில் காயம் அடைந்தார்.
இதனையடுத்து உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், ஆல்வினை துப்பாக்கியால் சுட்டதில் இரு கால்களிலும் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயம் அடைந்த ஆல்வினை, அதிகாலை 3 மணி அளவில் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் ஆல்வினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் காயமடைந்த காவலர் ராஜ்குமாருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே,
கோவை அரசு மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர் ராஜ்குமாரை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை ஆணையர் ஸ்டாலின், “காயம் அடைந்த காவலர் ராஜ்குமார் நலமுடன் உள்ளார். சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப் பின்னர் தகவல்கள் தெரிவிக்கப்படும்” என்றார்.