கோயம்புத்தூர்: தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலானது நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த மாவட்ட ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.
அந்த வகையில், கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில், கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது. இந்த பணியானது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகர், வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோரின் முன்னிலையில் பாதுகாப்பாக நடைபெற்றது.
இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட ஸ்டாராங் ரூமை, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் சீல் வைத்தார். இந்த கல்லூரி வளாகத்தில் காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், கல்லூரி வளாகத்தைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், "6 சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய கோவை நாடாளுமன்றத் தொகுதியின் வாக்கு இயந்திரங்கள் 6 அறைகளில் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறைகளைப் பாதுகாக்க ஒரு சுழற்சிக்கு 24 பேர் என மத்திய ரிசர்வ் போலீசார் உள்ளிட்ட 235 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், அரசியல் கட்சியினர் பார்வையிடுவதற்கு தனியாக சிசிடிவி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி தொடர்ந்து இயங்குவதற்கு தடையில்லா மின்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேர்தல் பணி முடிந்து திரும்பிய போது சோகம்! போலீசார் பயணித்த பேருந்து விபத்து! 21 பேர் காயம்! - MP Police Bus Accident