கோயம்புத்தூர்: கோவை ஒண்டிபுதூர் அடுத்த இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது இரண்டு மகன்கள் சிங்காநல்லூர் படகு துறை அருகே உள்ள பிரபல தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பும், 5ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் தனியார் வேன் மூலம் பள்ளிக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 18ஆம் தேதி சிறுவர்கள் இருவரும் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவதற்காக வேனில் வந்துள்ளனர். அப்போது அண்ணன், தம்பி இருவரும் வீட்டிற்கு அருகே வேனிலிருந்து கீழே இறங்க முற்படும்போது, அண்ணன் முதலில் கீழே இறங்கிய நிலையில், தம்பி வேனில் இருந்து இறங்குவதற்கு முன்பே ஓட்டுநர் வேனை இயக்கியுள்ளார்.
அதனால் சிறுவன் ஓடும் வேனில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது தவறுதலாக சக்கரத்தில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சிறுவனை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, மருத்துவமைனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சம்பவம் குறித்து காட்டூர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 1ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் மீது வேன் ஏறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சாலையில் நடந்து சென்ற சிறுமியை கடிக்க பாய்ந்த நாய்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சி