கோயம்புத்தூர்: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெண் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க கோரி நாடு முழுவதும் மருத்துவர்கள் அடையாள போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 14ம் தேதி இரவு பெண் மருத்துவர் ஒருவர் பணியிலிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நடக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அந்த நபரைக் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
கோவை அரசு மருத்துவமனை: இந்த சூழலில் கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதை அடுத்து, அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பெண் மருத்துவர்கள் தங்கியுள்ள விடுதி, அவர்கள் பணிபுரியும் வார்டு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாவலர்கள் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் நிர்மலா, ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,"கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு தங்கும் அறை மற்றும் கழிவறை வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அது நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் பழுதடைந்துள்ளதால், அதனை சீரமைக்க பொதுப்பணித்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எனவே அந்த குறை இல்லை மின்விளக்குகள் சரியாக எரிவது இல்லை என புகார் வந்தது அதனை சீரமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது என்றார். மேலும் கோவை அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் 250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஒரு சில கேமராக்கள் வேலை செய்யாததால் அதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கூடுதல் கேமராக்கள் பொருத்தவும், திட்டமிட்டுள்ளது. பயிற்சி மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழல் நிலவ வேண்டும் என்பதற்காக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தேவை இல்லாத அந்நிய நபர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழையாமல் தடுக்கும் வகையில் பாதுகாவலர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையின் ஒத்துழைப்பும் கேட்கப்பட்டுள்ளது.
அவர்களும் மருத்துவமனை வளாகத்தில் அடிக்கடி ரோந்து வருவதாகக் கூறியுள்ளனர். பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கை அனைத்தையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்படுத்துவதற்காக பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தங்கும் விடுதியில் ஒரு சில பகுதி பழுதடைந்துள்ளதால் பொதுப்பணித்துறையிடம் சீரமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
விரைவில் ரிச் பேண்ட்: மேலும் நோயாளிகளுடன் இருப்பவர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. பாஸ் இருந்தால் மட்டுமே உள்ள வர முடியும். வரும் காலங்களில் நோயாளிகளுக்கு (ரிச் பேண்ட்) பேண்ட் போடும் திட்டம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
கோவை அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏதாவது குறை இருந்தால் அது குறித்து உடனடியாக எங்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தற்காலிகமாக விலகுகிறேன்'.. நாதக-வினரின் தொடர் விமர்சனங்களால் எஸ்பி வருண்குமார் திடீர் முடிவு?