கோவை: கோயம்புத்தூரில் மருத்துவராக இருந்து வருபவர் சரவணமூர்த்தி. இவர் பள்ளிகளில் நடக்கும் மருத்துவ முகாமிற்கு செல்லும்போது மாணவிகளை தவறான இடத்தில் தொட்டு பாலியல் சீண்டல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், பள்ளிக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக வந்த 10க்கும் மேற்பட்ட மாணவிகள், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடம் இதுதொடர்பாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையில் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மருத்துவர் சரவணமூர்த்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மேலும் விசாரணையில், கைது செய்யப்பட்ட சரவணமூர்த்தி திருப்பத்தூரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இவர் கோவை ஈஷா மையத்தின் நடமாடும் மருத்துவக் குழுவின் மருத்துவராக பணியாற்றி வந்த நிலையில், பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஈஷா யோகா மையம் தரப்பு வெளியிட்ட அறிக்கையில்,"கோவை மாவட்ட கிராமப் பகுதிகளில் அவுட்ரீச் மருத்துவ வாகனத்தில் மருத்துவராக பணியாற்றியவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு உள்ளதை அறிகிறோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே ஈஷாவின் உறுதியான நிலைப்பாடு. இந்த வழக்கில் காவல்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில், 13 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் சிவராமன் என்பவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவராமன் ஆகஸ்ட் 23ஆம் தேதி காலையில் உயிரிழந்தார். மேலும், சிவராமனின் தந்தையும் வாகன விபத்தில் உயிரிழந்தார். முன்னதாக இந்த வழக்கில், பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிஃபர், தாளாளர் சாந்தன், என்சிசி பயிற்றுநர்களான சக்திவேல், இந்து, சத்யா, சுப்பிரமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவுக்கு பறந்த மகாவிஷ்ணு..'பரம்பொருள் அறக்கட்டளை' விவரங்களை சல்லடை போடும் போலீஸ்!