கோயம்புத்தூர்: நாட்டின் 78வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு, கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தினவிழாவில், ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 9.05 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள உள்ளார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
பின்னர், இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகாவில் நடைபெறுவது போன்ற அணிவகுப்பு கோயம்புத்தூர் மாநகர காவல் துறையின் ஆயுதப்படையினரால் நடத்தப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து, காளப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் கோலாட்டமும், வாகராயம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் ஒயிலாட்டமும், சி.எஸ்.ஐ பெண்கள் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி மாணவியர்களின் கும்மியாட்டமும் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து, நேஷனல் மாடல் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி, பிஎஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் உயர்நிலைப்பள்ளி, ஒத்தக்கால் மண்டப அரசு உயர்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி, ஜிடி எம் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி, கே.ஜி உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி மாணவ மாணவியர்களின் தேசிய ஒருமைப்பாட்டு நடனம் என சுமார் 700 மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளும் ஒன்பது கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தேசபற்றாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், இந்நிகழ்ச்சியினை பொதுமக்கள் வீட்டிலிருந்து கண்டுகளிக்கும் வகையில், மாவட்ட ஆட்சித் தலைவரின் சமூக ஊடக கணக்குகளான டிவிட்டர் (Twitter) CollectorCbe, முகநூல் (facebook) Collector Coimbatore ஆகியவற்றில் சுதந்திர தின விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: சுதந்திர தின பாஜக பைக் பேரணி; காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு!