கோயம்புத்தூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 57 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இச்சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசின் மீதும், காவல்துறை மீதும் சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற நகை வடிவமைப்பாளர், "பாக்கெட் சாராயம் என்ற அரக்கனே உயிரிழப்புக்கு காரணம்" என்ற தலைப்பில் களிமண் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளார். களிமண்ணை கொண்டு இறந்தவர்களின் கால்களை கயிறு போட்டு கட்டி இருப்பது போல் சிலையை வடிவமைத்துள்ள அவர், ஒரு காலில் பெண்களின் மாதிரி தாலியும் ஒரு காலில் குங்குமப் பொட்டையும் வைத்து இரு கால்களை இணைத்து கட்டும் கயிற்றில் மாதிரி சாராய பாக்கெட்டை கட்டி உள்ளார்.
மேலும் அதன் கீழ் பூ ஒன்றையும் வைத்து, கணவனை இழந்த பெண்களின் தலையில் இருந்து பூ கீழே விழுந்தது என்பதை உணர்த்தும் வகையில் அமைத்துள்ளார்.
இது குறித்து பேசிய ராஜா, "கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களது மனைவியின் பூவும், பொட்டும், தாலியும் பறிபோய் கைம்பெண்ணாக நிற்கிறார்கள் என்பது நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக களிமண் சிற்பம் ஒன்றை உருவாக்கி அஞ்சலி செலுத்தி உள்ளேன்.
இது போன்ற சம்பவம் இனி வேறு எங்கும் நடக்கக்கூடாது. மது விற்பனையை அரசு ஒழிக்க வேண்டும். மனைவி, குழந்தைகள், பெற்றோர்களுக்காக வாழ வேண்டுமெனவும், சுயநலத்திற்காகவும் தனது இன்பத்திற்காகவும் மது அருந்த கூடாது" என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: "எங்கள் நிலை இனி யாருக்கும் வரக்கூடாது.." கண்ணீர்க் கடலில் கருணாபுரம் குழந்தைகள்! - Kallakurichi Illicit Liquor