மீனம்பாக்கம்: சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து, பெருமளவு போதைப் பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று, அதிகாலையில் வந்து வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தாய்லாந்து நாட்டில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த சுமார் 26 வயது இளைஞர் ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில், லாவோஸ் நாட்டில் இருந்து, தாய்லாந்து வழியாகச் சென்னைக்கு வந்திருந்தார்.
சூட்கேஸில் ரகசிய அறை: மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் அவரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதனையடுத்து அவரை வெளியே விடாமல், சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, தனி அறையில் வைத்து, மேலும் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதோடு அவருடைய சூட்கேஸை ஆய்வு செய்தபோது, சூட்கேஸில் ரகசிய அறை இருந்ததை கண்டுபிடித்தனர்.
அந்த ரகசிய அறைக்குள் மூன்று பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த பார்சல்களை அதிகாரிகள் கைப்பற்றி, பிரித்துப் பார்த்தனர். அதற்குள் போதை பவுடர் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்தப் போதை பவுடரை எடுத்து ஆய்வுக்கூடத்தில் பரிசோதித்த போது, அது மிகவும் விலை உயர்ந்த கொக்கையின் போதைப் பொருள் என்று தெரிய வந்தது.
35 கோடி ரூபாய் மதிப்பு: மேலும், அந்த மூன்று பார்சல்களிலும் 3.3 கிலோ கொக்கையின் போதைப் பொருள் இருந்துள்ளது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.35 கோடி ஆகும்.இதனையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், இந்தோனேசியா இளைஞரைக் கைது செய்து, அவரிடமிருந்த கொக்கையின் போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் இந்தோனேசியா நாட்டிலிருந்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு, லாவோஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சர்வதேச போதை கடத்தும் கும்பல், இந்த சூட்கேஸை இந்தோனேசியா இளைஞரிடம் கொடுத்துள்ளனர். அதை வாங்கிக் கொண்ட அந்த இளைஞர், லோவோஸ் நாட்டிலிருந்து, தாய்லாந்து சென்று, தாய்லாந்து நாட்டிலிருந்து இந்த விமானத்தில் சென்னை வந்தது தெரிந்தது.
மேலும், இந்த இளைஞர் சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்றும், இவர் ஏற்கனவே சில முறை, சென்னைக்கு போதைப் பொருள் கடத்தி வந்துள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள இந்தோனேசிய நாட்டு இளைஞரிடம், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் இவர் யாரிடம் இந்த போதைப் பொருளைக் கொடுக்க வந்தார்? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் லாவோஸ் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 35 கோடி மதிப்புடைய கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் குழந்தை விற்பனை.. பீகார் தம்பதி உட்பட 5 பேர் கைது!