தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயலாளராக அகமது என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெற்றுச் செல்ல உள்ள நிலையில், கடந்த இரு தினங்களாக வங்கியில் கூட்டுறவுத் துறை இணை பதிவாளர் அலுவலக அதிகாரிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் திடீரென தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் கலுங்குவிளை வங்கிக்கு கடனாக வழங்கப்பட்ட தொகையில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கையாடப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது. இது குறித்து வங்கி செயலாளர் அகமதுவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தைக் கையாடல் செய்ததை அகமது ஒப்புக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், இந்த விவகாரம் அதிகாரிகளுக்குத் தெரிய வந்த நிலையில், அந்த தொகையில் 14 லட்சம் ரூபாயைத் திருப்பி செலுத்தியுள்ளார். இந்த நிலையில், முகமது இம்மாதத்துடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் பணம் கையாடல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் அதிகாரிகள் அவரை இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். இதனால் சாத்தான்குளம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: +2 ரிசல்ட்: பாடவாரியாக தேர்ச்சி, சென்டம் எடுத்தவர்கள் விவரம்! - TN 12th Results 2024