சென்னை: இந்திய விமானப் படையின் நிறுவன நிறைவு நாளைக் கொண்டாடும் விதமாக, விமான சாகச கண்காட்சியானது சென்னை மெரினா கடற்கரையில், நாளை(அக்.6) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
இந்த சாகச நிகழ்ச்சிக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியை நேரில் பார்வையிட உள்ளனர்.
இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, 06.10.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மெரினா கடற்கரையில் நடைபெறும் விமானப்படை சாகச நிகழ்வுகளை காண பொதுமக்கள் நலன் கருதி மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.#MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus |… pic.twitter.com/6qDhwK8GJP
— MTC Chennai (@MtcChennai) October 4, 2024
இந்த சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம் என சென்னை விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பொதுமக்கள் பார்ப்பதற்கு என மெரினா கடற்கரையில் ஒரு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சுமார் 200 பேர் பார்க்கலாம்.
அதுமட்டுமின்றி மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்கும் வண்ணம் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியைக் காண சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : AIR Show பார்க்க மெரினா போறீங்களா? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!
இந்நிலையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்புப் பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காலை 8 மணி முதல் அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்திற்கு வரும் வழக்கமான 120 பேருந்துகளுடன், கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கப்படும் எனவும், மெட்ரோ ரயிலில் இருந்தும் வரும் பொதுமக்களை அழைத்துச் செல்வதற்காக அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 25 சிற்றுந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சென்னை பல்கலைக்கழகம் வரை 3 நிமிட இடைவெளியில் சிற்றுந்துகளும் (small bus) , அதேபோல டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பி.எம்.தெரு வரை 2 நிமிட இடைவெளியில் 25 சிற்றுந்துகளும் இயக்கப்பட இருக்கிறது.
சிறப்புப் பேருந்துகள் பேருந்து நிலையத்திலிருந்து முறையாக இயக்கப்பட இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் அதிகாரிகளை நியமித்து பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே சிறப்பு பேருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்