சென்னை: வடகிழக்கு பருவமழையை ஒட்டி சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக வீனஸ் நகர் பம்பிங் ஸ்டேஷன், ரெட்டேரி தெற்கு உபரி நீர் வெளியேற்றம், பாலாஜி நகரில் நடைபெற்ற மருத்துவ முகாம், தணிகாசலம் கால்வாய் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
கார்த்திகேயன் சாலையில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், காமராசர் சத்திரத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி, மதிய உணவு பரிமாறி, அவர்களுடன் உணவருந்தினார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதிப்படைந்த பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர்!#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@KN_NEHRU @PKSekarbabu @mp_saminathan@PriyarajanDMK @chennaicorp pic.twitter.com/AVUkAlzcqU
— TN DIPR (@TNDIPRNEWS) October 17, 2024
மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை: இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 15ஆம் தேதி அன்று வட சென்னை பகுதிகளிலும், நேற்று தென் சென்னை பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு, நிவாரணப் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக, அம்மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் தங்கும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள்#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@KN_NEHRU @PKSekarbabu @mp_saminathan@PriyarajanDMK @chennaicorp pic.twitter.com/svvEG4mQ3F
— TN DIPR (@TNDIPRNEWS) October 17, 2024
மழைநீர் வெளியேற்று பணிகள் குறித்து ஆய்வு: இந்நிலையில் இன்று மழைக் காலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கும் தாழ்வான இடங்களான கொளத்தூர், வீனஸ் நகர், கணேஷ் நகர், செல்வி நகர் மற்றும் மஹாவீர் நகர் உள்ளிட்டப் பகுதிகளில் தேங்கும் மழைநீரினை அகற்றிட 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மழைநீர் வெளியேற்றும் நிலையத்தின் மூலம், மழைநீர் வெளியேற்றப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூய்மைப் பணியாளர்களுடன் உணவருந்திய முதலமைச்சர்#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @KN_NEHRU @PKSekarbabu @mp_saminathan @PriyarajanDMK @chennaicorp pic.twitter.com/gnCuEaZhsq
— TN DIPR (@TNDIPRNEWS) October 17, 2024
பின்னர், அங்கிருந்த பொதுமக்கள் மழைநீர் தேங்காமல், பாதிப்பு ஏதும் ஏற்படாமல் சிறப்பாக நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். நீர்வளத்துறை சார்பில் ரெட்டேரியை 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆழப்படுத்தி, கரைகளை உயர்த்தி, அதன் கொள்ளளவினையும் உயர்த்தி, 3.5 கி.மீ. சுற்றுச்சுவர் கட்டும் பணி மற்றும் ரெட்டேரி தெற்கு பகுதியில் உள்ள மதகினை சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மருத்துவ முகாமில் ஆய்வு: பருவமழை காலத்தில் பொது மக்களுக்கு நோய்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாத்திடும் பொருட்டு, பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாலாஜி நகர் மருத்துவ முகாமினை முதலமைச்சர் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். இம்முகாமில் 12 மருத்துவர்கள் கொண்ட குழு சிகிச்சை அளித்து வருகிறது.
மேலும், பொதுமக்களுக்கு முட்டை, ரொட்டி, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை முதலமைச்சர் வழங்கினார். அயனாவரம் மற்றும் மாதவரம் வட்டத்தில் அமைந்துள்ள தணிகாசலம் நகர் உபரிநீர் கால்வாயில், கூடுதலாக உபரிநீர் செல்லும் வகையில் 91 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்: பெரியார் நகர், கார்த்திகேயன் சாலையில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபம், பெரம்பூர், செம்பியம், ராகவா தெருவில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. புத்துயிர் சிறப்புப் பள்ளியில் பயிலும் 70 மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலன் மற்றும் பள்ளியின் மேம்பாட்டிற்காக 2 கணினிகள், 1 பிரிண்டர், 2 இரும்பு பீரோ, அத்தியாவசியப் பொருட்கள் என 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களையும், அச்சிறப்பு பள்ளியின் தாளாளர் டாக்டர் எட்வின் ராஜ்குமாரிடம் பள்ளி மேம்பாட்டிற்காக நிதியுதவியும் வழங்கினார்.

தூய்மைப் பணியாளர்களுடன் உணவருந்திய முதலமைச்சர்: பின்னர், ஜம்புலிங்கம் பிரதான சாலையில் உள்ள காமராசர் சத்திரத்தில், 600 தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, ரெயின் கோட், புடவை, போர்வை, ரஸ்க், பால் பவுடர், துவரம் பருப்பு, மிளகாய்த்தூள், சமையல் எண்ணெய், லுங்கி உள்ளிட்ட 10 அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, அவர்களுக்கு பிரியாணி பரிமாறி, அவர்களுடன் உணவருந்தினார்.
இதையும் படிங்க: மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: திருப்புகழ் கமிட்டி பரிந்துரை பின்பற்றப்பட்டதா? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி!
இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர் எஸ். சுதர்சனம், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வினய், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர் கணேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
வெள்ளப் பணியை அரசியலாக்க முயற்சி: ஆய்வின் போது செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மழை வெள்ள பணியை அரசியல் ஆக்க முயற்சிக்கிறார்கள். என்ன பணி நடந்துள்ளது என்பது மக்களுக்கு தெரியும். அவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதை அரசியலாக்கி வியாபாரம் ஆக்க நினைக்கிறார்கள். நான் அதை விரும்பவில்லை. எந்த மழை வந்தாலும் சமாளிப்பதற்கு அரசு தயாராக உள்ளது. அதை ஏற்கனவே கூறியிருக்கிறோம்.
எதிர்மறை விமர்சனங்கள் குறித்து கவலை இல்லை: தொடர்ந்து செய்து வருகிறோம். மழைக்கால பணிகள் குறித்து வரும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து கவலை இல்லை. ஏனெனில் அவை உண்மை இல்லை. உண்மை இருந்தால் கவலை கொள்ளலாம் உண்மை இல்லாததால் கவலை இல்லை. மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள். எங்களுக்கு தெரிந்து பெரும்பாலான இடங்களில் நீர் வெளியேறிவிட்டது. எங்களுக்கு தெரியாத இடங்களில் இருந்தாலும் அவை வெளியேற்றும் பணி நடைபெறும்.
எங்கள் பணி மக்கள் பணி: மாநகராட்சி பணிகள் சிறப்பாக இருந்தது. துப்பரவு பணியாளர்கள், அலுவலர்கள் என அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றியை தெரிவித்துள்ளேன். சமூகவலைதளங்களில் மழைவெள்ள பணிகள் குறித்து பாராட்டுகள் வருகிறது. அதே நேரத்தில் இதனை தாங்கி கொள்ள முடியாதவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். அது குறித்து கவலை இல்லை. எங்கள் பணி மக்கள் பணி. அதை தொடர்ந்து செய்கிறோம்” என்றார்.
அரசின் முழுதிறனையும் காண்பிக்கும் அளவிற்கு மழை இருந்ததா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர், நிச்சயம் இருந்தது எங்கள் பணி எப்படி இருந்தது என மக்களுக்கு தெரியும் என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்