திருச்சி: திருவானைக்கோவில் அருகே உள்ள திருவளர்சோலையைச் சேர்ந்தவர், விக்னேஷ். இவர் பொன்னி டெல்டா அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில், அதேப் பகுதியை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் திருவளர்சோலையில் பழக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் விக்னேஷுக்கும், நாகேந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இருதரப்பினரிடையே மோதல்: அப்போது, இதில் விக்னேஷ் என்பவர் நாகேந்திரன் உடன் சென்றிருந்த சங்கேந்தியைச் சேர்ந்த அவரது நண்பர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், அவரும் பதிலுக்கு தாக்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று எங்கள் உறவினரை எப்படி அடிக்கலாம் எனக் கூறி நாகேந்திரன் நண்பர்களின் ஆதரவாளர்களான திருவளர்சோலையைக் கீழத்தெருவைச் சேர்ந்த ஜான் மகன் நெப்போலியன், காமராஜ் மகன் கதிரவன், சேட்டு மகன் சங்கர், ரமேஷ் மகன் கமலேஷ் உட்பட சிலர் விக்னேஷ் வீட்டிற்கு சென்று விக்னேஷிடம் எப்படி நீ அடிக்கலாம்? எனக் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பொழுது இருதரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், விக்னேஷின் உறவினர்கள் எசனக்கோரை பகுதியில் இருந்து வந்துள்ளனர். அப்படி வந்தவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி இருதரப்பினருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது.
ஒருவர் பலி: இதில் நெப்போலியன், கதிரவன், கமலேஷ் ஆகிய நான்கு பேருக்கும் பலத்த அடி மற்றும் கத்தி குத்து விழுந்துள்ளது. அவர்கள் நான்கு பேரையும் திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். இதில், நெப்போலியன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதில் காயம் அடைந்த கதிரவன், சங்கர், கமலேஷ் ஆகிய மூன்று பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசார் தீவிர விசாரணை: இந்த சம்பவம் பற்றி ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததோடு, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்காக திருவளர்சோலை பகுதியில் போலீசாரை குவித்துள்ளனர். பழக்கடைக்காரருக்கும், பெட்டிக்கடைக்காரருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக, ஸ்ரீரங்கம் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகிய சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர். திருவளர்சோலை பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "சம்பளம் ஒழுங்கா கிடைக்காததால் எங்களுக்கு வேற வழி தெரியல" - குமுறும் தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்! - sanitation workers protest