சென்னை: சிஐடியு தலைவர் சௌந்தர ராஜன் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பொதுவாகவே காவல் துறையினராக இருந்தாலும் பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்பதுதான் அரசாங்க விதி. அவர்கள் பணியின் நிமித்தமாக, அதுவும் வாரண்ட் இருந்தால் மட்டுமே பேருந்தில் இலவசமாக பயணிக்க முடியும். வாரண்ட்டை பேருந்தின் நடத்துநரிடம் காண்பித்து பின்னர் மீண்டும் வாங்கிக் கொள்ளலாம்.
தற்போது நாங்குநேரியில் காவலர் ஆறுமுகபாண்டியன் பேருந்தில் பயணித்த போது நடத்துநர் பயணச்சீட்டு வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அவர், பயணச்சீட்டு வாங்க மறுத்து விட்டார். பின்னர், இருவருக்குமிடையே பெரும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்த நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத்துறை அதிகாரிகள், அரசுp பேருந்து ஓட்டுநர்கள் மீது சீட் பெல்ட் போடாமல் வாகனம் இயக்குவது மற்றும் நோ பார்க்கிங் போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி அவர்களுக்கு அபராதம் விதித்துக் கொண்டு இருக்கின்றனர்.
இது ஒரு மோசமான பழி வாங்கும் நோக்கத்தோடு போலீசார் செயல்படுகின்றனர். சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொண்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமான முறையில் பயணச்சீட்டு கேட்டது குறித்து தவறான புரிதல்களோடு இவ்வாறு பழி வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
போக்குவரத்து பேருந்துகளில் 10,500 பேருந்துகளுக்கு மேல் சீட் பெல்ட் என்பது இல்லை. அந்த பேருந்துகள் அனைத்துமே இயக்குவதற்கு சரியானதாக இல்லை. ஓட்டுநர்கள் இந்த பேருந்துகளை இத்ததைய காரணங்களைக் கூறி இயக்காமல் இருக்க முடியும் அல்லது ஓரமாக நிறுத்தி வைக்க முடியும். ஆனால், ஓட்டுநர்கள் அதை செய்யவில்லை.
ஏனெனில், அவர்கள் சமூகப் பொறுப்புடன் இருக்கின்றனர். அவர்கள் சமுதாயத்திற்காக தன்னுடைய உயிரை பணயம் வைத்து வேலை செய்து கொண்டிருக்கின்றனர். ஏழை மக்களைக் கருத்தில் கொண்டு சில சட்ட வரம்புகளை மீறி இவர்கள் சமூகத்திற்கு தொண்டாற்றி வருகின்றனர்.
ஆனால் பயணச்சீட்டு கொடுப்பது, வாங்குவது என்பது சாதாரணமான அடிப்படையான சட்டம். அதை அனைவரும் கட்டாயம் எடுத்துத்தான் ஆக வேண்டும். அதை எடுக்க முடியாது என்று அந்த காவலர் கூறியது தவறு. நடத்துநர் மீது எந்த தவறும் இல்லை. ஆனால் இத்தகைய சாதாரண நிகழ்விற்கு ஒரு மாபெரும் பழி வாங்கும் உணர்வோடு காவல் துறையினர் செயல்படுவது சரியான அணுகுமுறை அல்ல.
ஒரு பேருந்தில் சாதாரணமாக ஒரு பயணி இவ்வாறு செய்தால் பேருந்து ஓட்டுநர்கள் உடனடியாக அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு பேருந்தை கொண்டு செல்வோம். ஆனால் ஒரு காவலரே இவ்வாறு செய்தால் எங்கே சென்று சொல்வது? சட்ட ஒழுங்கை கடைப்பிடிப்பவர்களே இவ்வாறு செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. பதிலுக்குப் பதில் என்ற நோக்கம் எந்த விதத்திலும் நியாயமானது அல்ல.
ஓட்டுநர்கள் செய்யும் தவறுகளை அவர்களது துறை வாரியாக நடவடிக்கை எடுக்கிறார்கள். அவர்களுக்கு சில எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப்படுகிறது. மேலும் வேலையை சில நாட்கள் நிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறை என்பது மிக முக்கியமான மற்றும் அத்தியாவசியமான துறையாகும். இந்த இரு துறைகளுக்கு இடையிலான மோதல் தமிழக மக்களிடையே பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. எனவே இந்த துறைகளுக்கு இடையே பிரச்சனை வரக் கூடாது. முக்கியமாகக் காவல் துறையினர் இதற்குக் காரணமாக இருக்கக் கூடாது.
போக்குவரத்துத் துறை மற்றும் தொழிற்சங்கங்களை பொறுத்தவரை இவர்கள் இந்த பிரச்னையை பொறுமையாகவும், நிதானமாகவும் அணுக வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் மிகவும் கடினமானதாக மாற்றிவிடக் கூடாது.
காவல்துறை எடுக்கும் இந்த பழி வாங்கும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சரி செய்ய வேண்டும். சமூகப் பொறுப்பு என்பது மிக மிக முக்கியம். அதைத்தான் நாங்கள் எங்கள் தொழிற்சங்கத்தில் உள்ள உறுப்பினர்களிடம் அறிவுறுத்தி வருகிறோம்.
இரண்டு துறை தலைவர்களையும் தமிழக அரசு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த வேண்டும். பின்னர் அந்தந்த அதிகாரிகள் அவர்களுக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகளுக்கு இனிமேல் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட வேண்டும். இதுவே எளிய தீர்வாக இருக்கும், அதற்கு மீறி பெரும்பாலும் இந்த பிரச்னை தொடராது" என்று கூறினார்.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்த மோதல்; கட்டிப்பிடித்து சமாதானமான காவலர் - நடத்துநர்.. வைரலாகும் வீடியோ! - Police Vs TNSTC Issue