சென்னை: நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற இருப்பதால், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு காலை மற்றும் மதியம் உணவு வழங்க ஏற்பாடு செய்யுமாறு, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவைச் சந்தித்து, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் செயலாளர் ஹரி சங்கர், இணை செயலாளர் லெனின் மற்றும் பொருளாளர் பிரபா ஆகியோர் மனு அளித்தனர்.
மூன்று லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குறிப்பாக, வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு உணவுப் படியாக தேர்தல் ஆணையத்தினால் 18 மற்றும் 19ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு காலை 150 ரூபாய், மதியம் 300 ரூபாய் வழங்கப்படுகிறது.
தேர்தல் நாளான 19ஆம் தேதி வாக்குச்சாவடி மையத்தில் பணியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குச்சாவடி மையங்களை விட்டு காலை மற்றும் மதிய உணவிற்காக வெளியில் செல்ல முடியாத சூழல் இருக்கிறது. அதேபோல், கடந்த கால தேர்தல் பணியின் போதும், உணவு உண்ணாமல் பணியாற்றிய சூழலும் இருந்துள்ளது.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்கள் கடுமையான நெருக்கடியினை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினருக்கு உரிய முறையில் உணவு ஏற்பாடு செய்து தரப்படுகிறது. அதேபோல், தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுக்கும் காலை மற்றும் மதியம் உணவு ஏற்பாடு செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணை வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி! - Lok Sabha Election 2024