சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி உடல் நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார்.
இவர், கடந்த 20 நாட்களாகக் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு சென்னையில், சிகிச்சை பெற்று வந்தவர். இந்த நிலையில், நேற்றைய (ஏப்.5) தினம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக முதலமைச்சர் கலந்து கொண்ட தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்வதற்காக வந்தபோது மயக்கம் அடைந்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சூழலில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில், புகழேந்தியின் உடல் விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரளான மக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் புகழேந்தி எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது. கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார்.
நேற்று என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், சற்றே மயக்கம் வர, மருத்துவமனைக்குச் சென்றார். நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மைவிட்டுப் பிரிந்த செய்தி நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
புகழேந்தியின் மறைவு குறித்து அறிந்ததும், மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியின் நெருங்கிய நண்பரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி நேரடியாகச் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிதம்பரம் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு நாளை (ஏப்.07) அவரது இல்லத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், தனது 'X' வலைதளப் பக்கத்தில், "அண்ணன் புகழேந்தியை இயற்கை இப்படி சட்டென்று நம்மிடமிருந்து பிடுங்கிக்கொள்ளும் என நினைக்கவில்லை. திமுக மாவட்டச் செயலாளர், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் புகழேந்தி உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி நிலைகுலைய வைக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு என் அஞ்சலியைச் செலுத்துகிறேன்! அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திமுக தொண்டர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன" என்று புகழேந்தியின் மறைவிற்கு இரங்கல் செய்தியைப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் கிடையாது" - தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு!