கடலூர்: தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் சிதம்பரம் தொகுதி (தனி) 27வது தொகுதியாக உள்ளது. இத்தொகுதியில் 5 பொது சட்டப்பேரவைத் தொகுதிகளும், ஒரு தனி சட்டப்பேரவைத் தொகுதியும் உள்ளன.
அனைத்து கட்சிகளும் வாய்ப்பு: குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய, சிதம்பரம் மக்களவைத் தொகுதியைப் பொருத்தவரை, அதிகபட்சமாக காங்கிரஸ் 5 முறையும், திமுக 4 முறையும், பாமக 3 முறையும், அதிமுக மற்றும் விசிக தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
த்ரில் வெற்றி பெற்ற திருமா: 2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சிதம்பரம் மக்களவை தொகுதியில் 7,49,625 ஆண் வாக்காளர்கள்; 7,61,206 பெண் வாக்காளர்கள்; 86 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,10,917.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் போட்டியிட்ட திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்போது இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட சந்திரகாசன் 4,97,010 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 3,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் த்ரில் வெற்றி பெற்றார்.
மீண்டும் மோதும் இருவர்: நடைபெற்று முடிந்துள்ள 2024 நாடாளுமன்றத் தேர்தலில், இத்தொகுதியில் 7,53,643 ஆண் வாக்காளர்கள்; 7,66,118 பெண் வாக்காளர்கள்; 86 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 15,19,847 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 11,60,635 வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். மொத்த வாக்குப்பதிவு 76.37 %
சிதம்பரம் தொகுதியில், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், அதிமுக சார்பில் சந்திரகாசன், பாஜக சார்பில் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜான்சிராணி உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக பார்க்கப்படுகின்றனர்.
இவர்களில், கடந்தமுறை வெற்றிபெற்ற வேட்பாளர் திருமாவளவன் மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் சந்திரகாசன் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. அதேசமயம், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கும் ஓரளவு வாக்குகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
அயோத்திக்கு ஆன்மிக சுற்றுலா: அரியலூர், கொல்லாபுரம் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வாக்குகள் சேகரித்தார். அதேபோல, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் வாக்குகள் சேகரித்தார். தான் வெற்றிப் பெற்றால் தொகுதி மக்களை அயோத்திக்கு ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்வேன் என்று கார்த்தியாயினி பேசிய வீடியோ தேர்தல் நேரத்தில் சமூக ஊடகங்களில் வைரலானது.
இதேபோல், அரியலூர் புறவழிச் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சந்திரகாசனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
விசிக வியூகம்: விசிக தலைவர் திருமாவளவன், தொகுதி மக்களை கவரும் விதமாக டிஜிட்டல் முறையில் கியூ.ஆர் கோர்டு (QR Code) மூலம், விசிகவின் தேர்தல் வாக்குறுதிகளை சென்றடைய செய்து அசத்தினார். விசிகவின் சின்னமான பானையை தொகுதி மக்கள் மனதில் நிலைநிறுத்தும் நோக்கில், ஏழு உயரம் கொண்ட பிரம்மாண்ட பானையை வடிவமைத்து, தேர்தல் பிரச்சார வேன்களில் அதனை தொகுதி முழுவதும் வலம் வர செய்து விசிக நிர்வாகிகள் கலக்கினர்.
இதற்கிடையே, தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக சிதம்பரம் புறவழிச் சாலை கண்ணன் சாவடி என்ற இடத்தில் தற்காலிகமாக வீடு ஒன்றினை திருமாவளவன் வாடகைக்கு எடுத்திருந்தார். இந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது தேர்தல் சமயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிதம்பரத்தை கைப்பற்றப் போவது யார்?: சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை குறைந்தபட்சம் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற இலக்குடன், தொகுதியில் முகாமிட்டு பணியாற்றினார் விசிக துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா. அதேசமயம் கடந்த முறை வெறும் மூவாயிரத்து சொச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தவறிவிட்ட வெற்றியை இந்த முறை பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் களப்பணி ஆற்றியுள்ளார் அதிமுக வேட்பாளர் சந்திரகாசன். திருமா vs சந்திரகாசன் என்றுள்ள சிதம்பரத்தில் இம்முறை வெற்றி யாருக்கு என்பது ஜுன் 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: தேர்தல் 2024: மத்திய சென்னையை தக்கவைக்குமா திமுக? வெற்றி யார் பக்கம்? - LOK SABHA ELECTION RESULT 2024