அரியலூர்: சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக கார்த்தியாயினி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “எனது முதல் வாக்குறுதியாக, சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களை ஒரு வார காலத்திற்கு ஆன்மீகச் சுற்றுலாவாக, குழந்தை ராமரை தரிசிக்க அழைத்துச் செல்வேன். அரியலூர் மாவட்டத்தில் அதிகம் உள்ள சிமெண்ட் ஆலைகளால் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட சுண்ணாம்பு சுரங்கங்களில், இயற்கை காடுகளை வளர்க்கவும், விளையாட்டு மைதானங்களை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன்.
என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு குறைவாக வழங்கிய இழப்பீட்டிற்குப் பதிலாக அதிகப்படியான தொகையை பெற்றுத் தரவும், தற்பொழுது காலியாக உள்ள 4,000 பணியிடங்களில் என்எல்சிக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன்.
அரியலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பேன். இப்பகுதியில் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வந்து தொழிற்சாலைகளைப் பெருக்கி வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன்” என கூறினார். அவருடன் பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா.பெரியசாமி, அரியலூர் பாஜக மாவட்ட தலைவர் அய்யப்பன், வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி, பாமக அரியலூர் மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் வந்திருந்தனர்.