சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில், மொத்தம் 29 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இக்கட்சி 4 சட்டமன்ற உறுப்பினர்களையும், 1 நாடாளுமன்ற உறுப்பினரையும் கொண்டுள்ளது.
5 மாநிலங்களில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்யுமாறு கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி கட்சியின் சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு பொதுத்தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீத வாக்குகளைக் கூட பெறாத காரணத்தால், பொதுச் சின்னத்திற்கான உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்க இயலவில்லை என கடந்த மார்ச் 3ஆம் தேதி கடிதம் மூலம் தெரிவித்த தேர்தல் ஆணையம், கோரிக்கையை நிராகரித்தது.
அதனைத் தொடர்ந்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் மார்ச் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீத வாக்குகளைக் கூட பெறவில்லை என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்ததை எதிர்த்து, 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் வாக்குகளை உரிய தரவுகளுடன் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தது. மேலும், கட்சி சின்னம் தொடர்பாக மார்ச் 27ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் பானை சின்னம் ஒதுக்கத் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.
இதனையடுத்து வேட்புமனு வாபஸ் இன்று மாலை 3 மணியுடன் (மார்ச்.30) முடிவடைந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தால் சின்னங்கள் ஒதுக்கும் பணிகள் நடைபெறத் தொடங்கியது.
இந்த நிலையில், விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் இருவருக்கும் பானை சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதையும் படிங்க: துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு! - Match Box Allocated For MDMK