சென்னை: மாங்காடு அடுத்த கணேஷ் அவென்யூ, சுபஸ்ரீ நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (31), தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பூஜா குமாரி தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் 8 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு பூஜா குமாரி வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கமாகச் சாத்தப்பட்டி இருந்துள்ளது.
இதனைப் பார்த்த பூஜா குமாரி, கணவர் தூங்கிக் கொண்டிருப்பதாக என நினைத்து அருகில் இருந்த தனது தாய் வீட்டிற்குச் சென்று விட்டு காலை வீடு திரும்பியுள்ளார். அப்போதும் வீட்டின் கதவு உள்பக்கமாகச் சாத்தப்பட்டு இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பூஜா அக்கம் பக்கத்தினர் உதவியோடு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து, மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சீனிவாசன் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஆன்லைன் செயலில் பயன்படுத்தி 2 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்ற சீனிவாசன், அதனை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இதனையடுத்து, நகைகளை அடகு வைத்து ஆன்லைன் செயலியில் பெற்ற கடனை செலுத்தியுள்ளார்.
பின்னர், மீண்டும் அதே செயலியை பயன்படுத்தி கடன் பெற்றுள்ளார். இந்த முறை வாங்கிய கடனை முறையாகச் செலுத்தவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து, கடன் செயலியைச் சேர்ந்த ஊழியர்கள் அடிக்கடி சீனிவாசனைத் தொடர்பு கொண்டு அவதூறாகப் பேசியதாகவும், அவரது புகைப்படங்களைத் தவறாகச் சித்தரித்து அவரது தொலைப்பேசியில் உள்ள எண்களுக்கு அனுப்பியதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனால், மனமுடைந்த சீனிவாசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மது போதையில் தற்கொலை செய்து கொண்டு உள்ளார் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை அடுத்து சீனிவாசன் பயன்படுத்திய வந்த தொலைப்பேசியைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், இந்த சம்பவம் தொடர்பாகத் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர் உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பொது இடத்தில் கழிவு நீரை ஊற்றும் தனியார் லாரி.. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்!