சென்னை: சென்னை விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் தனியார் நிறுவனத்தில் ப்ரொடக்ஷன் மேனேஜராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு சாமுவேல் ராஜ் (வயது 23) என்ற மகன் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்ட சாமுவேல் ராஜ், கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து கத்திப்பாரா மேம்பாலத்தில், போரூர் வழியாக செல்லும் வளைவில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து, பரங்கிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு சாமுவேல்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சாமுவேல் ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இளைஞர் தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து விசாரனை மேற்கொண்டனர்.
டிஎன்பிஎல்லில் வாய்ப்பு கிடைக்கவில்லை: போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் இணைய வேண்டும் என்பதற்காக சாமுல்வேல் ராஜ் கடந்த சில வருடங்களாகப் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
மேலும் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் டிஎன்பிஎல் எனப்படும் 'தமிழ்நாடு பிரிமியர் லீக்' போட்டியில் தேர்வாவதற்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். ஆனால், இரண்டு ஆண்டுகளும் தேர்வாகாததால் மன வருத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். அப்படி நேற்று காலை மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்துவிட்டு வீடு திரும்பும் போது கத்திப்பாரா மேம்பாலம் அருகே இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல : சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.
ஈடிவி பாரத் வாட்ஸ் அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஒன்றரை டன் குப்பையில் தேடுதல் வேட்டை.. 7.5 சவரன் தங்க நகையை மீட்ட பணியாளருக்கு குவியும் பாராட்டுகள்!