சென்னை: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, நேற்று சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய், குவைத், சார்ஜா ஆகிய நாடுகளுக்குச் செல்லும் விமானம் மற்றும் அந்த நாடுகளிலிருந்து சென்னை வரும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், இன்னும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கனமழை ஓயாததன் காரணத்தால், தொடர்ந்து 2வது நாளாக இன்று துபாய், குவைத், சார்ஜா ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் 12 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதாவது, நேற்று இரவு துபாயிலிருந்து சென்னை வந்து, மீண்டும் சென்னையிலிருந்து துபாய் செல்ல வேண்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், அதைப்போல் இன்று அதிகாலை சென்னை வந்து விட்டு, மீண்டும் அதிகாலையில் சென்னையிலிருந்து துபாய் செல்ல எமிரேட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், சென்னையிலிருந்து துபாய் சென்று விட்டு, மீண்டும் துபாயிலிருந்து இன்று காலை சென்னை திரும்பி வர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள், நேற்று துபாய் சென்று விட்டு இன்று அதிகாலை சென்னை திரும்பி வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் ஆகிய 8 துபாய் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, நேற்று இரவு சென்னையிலிருந்து குவைத் சென்று விட்டு, இன்று காலை குவைத்தில் இருந்து சென்னை திரும்பி வர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானங்களும், சார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்து விட்டு, மீண்டும் அதிகாலை சார்ஜா செல்ல வேண்டிய ஏர் அரேபியா விமானங்கள் என மொத்தம் 12 விமானங்கள் இன்று (வியாழக்கிழமை) 2வது நாளாக சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன.
இதுதவிர, அபுதாபி, சார்ஜா, மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் ஒரு சில விமானங்கள், பல மணி நேரங்கள் தாமதமாக, சென்னை வந்து விட்டு மீண்டும் சென்னையிலிருந்து தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன. இதனால் ஐக்கிய அரபு நாடுகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகள், சென்னை விமான நிலையத்தில் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே நேற்று இரவு துபாயிலிருந்து சென்னை வந்து விட்டு, மீண்டும் இரவு 10 மணிக்கு சென்னையிலிருந்து துபாய் புறப்பட்டு செல்ல வேண்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் பயணிக்க சுமார் 100க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை விமானநிலையம் வந்திருந்ததனர். அப்போது விமான சேவை ரத்து என்று திடீரென அறிவிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்து பயணிகள் சென்னை விமான நிலையத்தில் உள்ள, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய விமான பயணிகள், "நாங்கள் வெளியூர்களில் இருந்து வந்திருக்கிறோம். இப்போது திடீரென விமானம் ரத்து என்று அறிவித்தால், குழந்தைகளுடன் இருக்கும் நாங்கள் இந்த இரவு நேரத்தில் எங்கு போய் தங்குவோம்?. எங்களுக்கு இதுகுறித்து முன்னதாகவே ஏன் அறிவிக்கவில்லை?" எனக் கேட்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு பதில் தெரிவித்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அதிகாரிகள், "நாங்கள் மழை ஓய்ந்து நிலைமை சீராகிவிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் மழை இன்னும் தொடர்ந்து பெய்வதால், பயணிகள் பாதுகாப்பு காரணமாகவே இந்த விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அங்கு வானிலை சீரடைந்ததும், உடனடியாக விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கும். இப்போது விமானம் சேவை ரத்தாகி, உங்களை அவதிப்பட வைத்ததற்காக, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று வருத்தம் தெரிவித்தனர்.
இருப்பினும், பயணிகள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்பு வந்த சென்னை விமான நிலைய அதிகாரிகள், "ஐக்கிய அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றத்தால், இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மோசமான வானிலை நிலவிக் கொண்டிருக்கும் போது, பயணிகளுடன் விமானம் அங்கு செல்வது, பயணிகளின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல. எனவே உங்கள் நலன் கருதித் தான், விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன" எனக் கூறி, பயணிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஐக்கிய அரபு அமீரகத்தில் வரலாறு காணாத கனமழை பெருவெள்ளம்! ஓமனில் 18 பேர் பலி! திகைத்துப் போன வளைகுடா நாடுகள்! - UAE Flood