சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று காலை 11.15 மணிக்கு 162 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என மொத்தம் 170 பேருடன் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.
இதனையடுத்து விமானி, விமானத்தை புறப்பட்ட இடத்திலேயே நிறுத்திவிட்டு, சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. விமான பொறியாளர்கள் குழு விமானத்துக்குள் ஏறி, பழுதடைந்த விமான இயந்திரங்களை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
இவ்வாறு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், விமானம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே, பயணிகள் அனைவரும் விமானத்துக்கு உள்ளாகவே அமர்ந்து இருந்தனர். விமானப் பொறியாளர்கள் குழு தொடர்ந்து இயந்திரக் கோளாறை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
ஆனால், நீண்ட நேரமாக இயந்திரங்களை பழுது பார்க்கும் பணி நடந்து கொண்டு இருந்ததால், விமானத்துக்குள் அமர்ந்திருந்த பயணிகள், விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பயணிகளுக்கு டீ, குளிர்பானங்கள் கொடுத்து அமைதிபடுத்தினர்.
தொடர்ந்து, விமானத்தை பழுது பார்க்கும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, விமானம் சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் தாமதமாக இன்று பகல் 1 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றது. எனவே, விமானி தக்க நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறைக் கண்டறிந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: சென்னை விமான நிலைய மெயின் ரன்வேயில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன?