சென்னை: சென்னையில் சில தினங்களாகவே தனியார் பள்ளிகள், கோயில், மருத்துவமனை, விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாகி உள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், போலி இமெயில் மூலம் மிரட்டல் அனுப்பும் நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு ஒன்பதாவது முறையாக பள்ளியின் தலைமையாசிரியர் அலுவலக இமெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலானது தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் போலியாக உருவாக்கப்பட்டு இந்த இமெயில் அனுப்பப்பட்டு உள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனியார் பள்ளியில் போலீசார் வழக்கம் போல் சோதனை மேற்கொண்ட நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்துள்ளது. இதேபோல் மேலும் சில தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி வேலை நாளில், பள்ளிக்கு தமிழக டிஜிபி பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பாஜக வழக்கறிஞர் மீதான குண்டர் வழக்கு.. காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு! - Madras High Court