சென்னை: வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்க உள்ளது. இந்தநிலையில் கனமழையின் காரணமாக, பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.
மெட்ரோ இரயில் சேவை: காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். முதல் மெட்ரோ இரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப் புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ இரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 11 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை:
பச்சை வழித்தடம்: புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
நீல வழித்தடம்: விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். அதே போல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்
இரவு 10 மணி முதல் 11 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை; கார் பார்க்கிங் ஏரியாவாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்!
தற்காலிக நிறுத்தம்: கூடுதலாக மெட்ரோ இரயில்கள் இயக்கப்படுவதால், பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாக செல்லும் மெட்ரோ இரயில் சேவைகள் மேற்கண்ட நாட்களில் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
மேலும் பச்சை வழித்தடத்திலிருந்து விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோவில் மாறி விமான நிலையம் மெட்ரோவுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பார்க்கிங் செய்ய வேண்டாம்: கனமழை காரணமாக தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள பரங்கிமலை மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ ஆகிய இடங்களில் பயணிகள் தங்கள் வாகனங்களை 15.10.2024 முதல் 17.10.2024 வரை நிறுத்த வேண்டாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.