சென்னை: தொழில்துறையுடன் இணைந்து இந்திய அரசாங்கத்தால் நிறுவப்படும் கட்டுமானத் தொழில் மேம்பாட்டு கவுன்சில் (CIDC), இந்திய கட்டுமானத் துறையின் பல்வேறு கூறுகளை தீவிரமாக ஈடுபடுத்தும் பிரதிநிதி அமைப்பாக செயல்படுகிறது. CIDC இந்திய கட்டுமானத் தொழிலை தொழில்முறை மற்றும் போட்டித்தன்மை கொண்டதாக மாற்றுவதற்கும், சமூகம் மற்றும் தேசத்தின் பெரிய நலன்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதற்கும் உழைத்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில், 15வது CIDC விஸ்வகர்மா விருதுகள் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ளது என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி,
சிறந்த கட்டுமானத் திட்டங்கள்: திட்டச் செயலாக்கத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சிறந்த முயற்சியினை அங்கீகரிக்கும் வகையிலும், நவீன சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மேம்பட்ட உள்கட்டமைப்பை வழங்கி வருவதற்காகவும் "சிறந்த கட்டுமானத் திட்டங்கள்" பிரிவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இவ்விருதினை பெற்றுள்ளது.
கட்டுமான சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணியாளர்களின் நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நிலையான நடைமுறைகள் மற்றும் பொறுப்பான கூட்டாண்மை குடியுரிமைக்கான அதன் அர்ப்பணிப்பால் "கட்டுமான சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல்" பிரிவின் கீழ் இவ்விருதினை பெற்றுள்ளது.
இந்தியாவின் சிறந்த மெட்ரோ ரயில் நெட்வொர்க்: நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தாக்கத்தை அங்கீகரிக்கும் வகையிலும், நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கான இணைப்பு மற்றும் இயக்கத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருவதற்காகவும் "இந்தியாவின் சிறந்த மெட்ரோ ரயில் நெட்வொர்க்" பிரிவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்க்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
தகுதிச் சான்றிதழ்: கூடுதலாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கட்டுமானத் திட்டங்களில் மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு சான்றாக, கட்டுமானத் தொழில் மேம்பாட்டு கவுன்சிலின் பசுமை பயிற்சி குழுவிடமிருந்து தகுதிச் சான்றிதழைப் பெற்றுள்ளது.
மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்களான L&T, HCC-KEC, TATA Projects Ltd, ITD Ltd, GC-NKAB, மற்றும் GC-AEON ஆகிய நிறுவனங்கள், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டத்தில் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளுக்காக கட்டுமானத் தொழில் மேம்பாட்டு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.