சென்னை: மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.7425 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ள நிலையில் மத்திய அரசு ரூ.63,246 கோடி ஒதுக்கியிருப்பதாக பாஜகவினர் பொய் பிரச்சாரம் மேற்கொள்வதாக தமிழக அரசின் உண்மை சரிபார்க்கும் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் உண்மை நிலவரம் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
முதல் கட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை 3 வழித்தடங்களில் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி ரூ. 63,246 கோடி செலவில் 118.9 கிலோமீட்டர் நீளமுள்ள, மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மத்திய அரசின் ஒப்புதலுக்காக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு (MoHUA) பரிந்துரைக்கப்பட்டது. இதன் பின்னரே, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 2020 ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி அன்று அடிக்கல் நாட்டினார்.
மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தும் தாமதம்: இதன் பின்னர் கடந்த கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கடந்த 2021-22ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், 118.9 கிலோ மீட்டர் தொலைவுள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-2-க்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
ரூ.63,246 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சரே நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு நிதியும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு ஒதுக்கப்படவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கூறி வந்தனர்.
முழு செலவும் தமிழக அரசே ஏற்க வேண்டும் : இந்த சூழலில் கடந்த கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி சென்னை வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா அளித்த பேட்டியில், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு சர்வதேச கடன்களை பெற மாநில அரசுக்கு உதவுவதே பொருளாதார விவகாரத் துறையின் கடமையாகும். மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை தொடர்ந்து எடுத்து வருகிறது. சர்வதேச கடன்களை பெற மத்திய அரசு உதவியுள்ளது. இதுபோல கடனாக பெற்று தந்த நிதியில் ஒரு ரூபாயைக் கூட மாநில அரசு பயன்படுத்தவில்லை.
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தை மாநில திட்டமாக கடந்த 2018ம் ஆண்டே மாற்றி தமிழ்நாடு அரசு முடிவு செய்துவிட்டது. மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தை மாநில அரசின் திட்டமாக தமிழ்நாடு அரசு மாற்றிக் கொண்டதால், அதற்கான முழு செலவையும் மாநில அரசுதான் ஏற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். எனவே, மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு இனி நிதி ஒதுக்குமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.
நம்பிக்கையுடன் டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் : எனினும் பெரும் நம்பிக்கையுடன் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம், "மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசின் பங்கை வழங்க வேண்டும் என்று மனு அளித்தார். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான முன்மொழிவு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்கிறது. இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டு, முதல் கட்டப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றிச் செயல்படுத்தியதைப்போல, 50:50 என்ற சமபங்கு வீதத்தில், மத்திய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணிகளையும் விரைந்து நிறைவேற்றிட ஒப்புதல் அளிக்க வேண்டும்," என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
மத்திய அரசு ஒப்புதல், நிதி ஒதுக்கீடு: இந்த நிலையில்தான் மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டப் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ரூ.63,246 கோடி ஒதுக்க நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. எனினும் கூட இந்த தொகையை முழுமையாக வழங்காமல் மத்திய அரசு தமது பங்காக ரூ.7,425 கோடியை மட்டுமே வழங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. ரூ.7,425 கோடி ஒதுக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து நேற்று எக்ஸ் பதிவு வெளியிட்டிருந்தார். மத்திய அரசு ஒதுக்கிய இந்த தொகையைத் தவிர மீதி தொகையானது மாநில அரசின் பங்கு மற்றும் சர்வதேச கடன்களை பெற்று மாநில அரசு மற்றும் மத்திய அரசும் இணைந்து இந்த திட்டத்தை முடிக்கும் என்று தெரிவிக்கபட்டிருந்தது.
#சென்னைமெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கு ₹63,246 கோடி நிதி வழங்கியுள்ள பாரத பிரதமர் திரு.#நரேந்திரமோடி அவர்களுக்கு சென்னைவாசிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
— Dr.SG Suryah (@SuryahSG) October 3, 2024
Heartfelt thanks to PM @NarendraModi from the people of #Chennai for sanctioning #ChennaiMetro Phase 2 with ₹63,246 funds. pic.twitter.com/pHyxXCKSdj
அரசியல் ஆதாய பதிவுகள் : இந்த நிலையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்காக அரசியல் ஆதாயம் தேடும் வகையில் பாஜகவினர் பொய் பிரச்சாரம் மேற்கொள்வதாக தமிழக அரசு கூறியுள்ளது. மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டப் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ரூ.63,246 கோடி ஒதுக்க நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. எனினும் கூட இந்த தொகையை முழுமையாக வழங்காமல் மத்திய அரசு தமது பங்காக ரூ.7,425 கோடியை மட்டுமே வழங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது.
வ.எண் | நிதி ஒதுக்கப்பட்ட | அனுமதி அளிக்கப்பட்ட தொகை |
1 | சமவிகித பங்கு | |
அ | இந்திய அரசு | ரூ.5407.40 கோடி |
ஆ | தமிழக அரசு | ரூ.5407.40 கோடி |
2 | துணை | |
இந்திய அரசு | ரூ.2,017.50 கோடி | |
தமிழக அரசு | ரூ.2,017.50 கோடி | |
3 | நீண்டகால கடன் | ரூ.33,593.40 கோடி |
4 | தமிழக அரசுக்கு துணை கடன் மூலம் நிலம்,ஆர்ஆர், வரி | ரூ.13, 183 .80 கோடி |
5 | இதர வகைகள் | ரூ.1, 619.00 கோடி |
மொத்தம் | ரூ. 63, 246.00 கோடி |
வ.எண் | உரிமை | அனுமதிக்கப்பட்ட தொகை |
1 | இந்திய அரசு (சமவிகித பங்கு,துணை கடன்) | ரூ.7,425.00 கோடி |
2 | தமிழக அரசு (சமவிகித பங்கு,துணை கடன்) | ரூ.22, 228.00 கோடி |
3 | நீண்டகால கடன் | ரூ.33,593.40 கோடி |
மொத்தம் | ரூ. 63, 246.00 கோடி |
இந்த நிலையில் மத்திய அரசு நிதி ஒதுக்கியதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து நேற்று எக்ஸ் பதிவு வெளியிட்டிருந்தார். மத்திய அரசு ஒதுக்கிய இந்த தொகையைத் தவிர மீதி தொகையானது மாநில அரசின் பங்கு மற்றும் சர்வதேச கடன்களை பெற்று மாநில அரசு மற்றும் மத்திய அரசும் இணைந்து இந்த திட்டத்தை முடிக்கும் என்று தெரிவிக்கபட்டிருந்தது. இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா என்பவர் தமது எக்ஸ் பதிவில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு ரூ.63,246 கோடி ஒதுக்கி இருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
சென்னை மெட்ரோவிற்கு ரூ63,246 கோடி நிதி அளித்ததாகப் பொய்!@CMOTamilnadu @TNDIPRNEWS https://t.co/NHhOr5H3ee pic.twitter.com/Mt4uTuyB8z
— TN Fact Check (@tn_factcheck) October 4, 2024
தமிழக அரசு விளக்கம் :
இது தொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு எக்ஸ் பதிவில், " சென்னை மெட்ரோ திட்டம் இரண்டாம் கட்டத்துக்கு ரூ.63,246 கோடி நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளதாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்," என கூறப்பட்டுள்ளது. மேலும், "இது தவறான தகவல். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசு தரப்பில் ரூ.7425 கோடி, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.22,228 கோடி, பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் மாநில அரசின் உத்தரவாதத்தில் கடனாக ரூ.33,593 கோடியும் பெறப்படும்," எனவும் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.