சென்னை: தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் 29, 30ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுமட்டும் அல்லாது, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்றும், பிப்ரவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், "அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை: நாளை (ஜனவரி 30) தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை வெப்பநிலை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வறண்ட வானிலை: நாளை, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவியது. மேலும், மழையானது எங்கும் பதிவாகவில்லை.
வெப்பநிலை மாறுதல்: கோவை மாவட்டத்தில் வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக வெப்ப அளவு வேறுபட்டுள்ளது” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சேலத்தில் 46 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு!