சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில், "7 மணி நிலவரப்படி ஃபெஞ்சல் புயலானது மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது எனவும், புதுச்சேரிக்கு கிழக்கு-வடகிழக்கே 60 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது எனவும், மேலும், புயலின் முன் பகுதி கரையைத் தொட்டது எனவும், இன்று இரவுக்குள் கரையைக் கடக்கும்" என தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் குறித்து டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் சமூக வலைத்தள பதிவு : "ஃபெஞ்சல் புயல் தற்போது புதுச்சேரிக்கு கிழக்கே-வடகிழக்கே 80 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு கிழக்கே-தென்கிழக்கே 80 கி.மீ தொலைவிலும், மகாபலிபுரத்திற்கு 40 கி.மீ கிழக்கே-தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது.
இப்புயல் வரக்கூடிய மணி நேரத்தில் மேற்கு திசையில் மிக மெதுவாக நகர்ந்து இன்று (30.11.2024) இரவு 7 மணிக்கு மேல் சென்னை மற்றும் புதுச்சேரி இடையே மரக்காணம் அல்லது மகாபலிபுரத்தை மையமாக வைத்து புயலின் முன்பகுதி கரையை கடக்க துவங்கும். கரையை கடக்கும் நிகழ்வு நாளை அதிகாலை வரை தொடரக்கூடும்" என பதிவில் கூறப்பட்டுள்ளது.
Cyclone Fengal Landfall
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 30, 2024
Hourly update 1900 IST
Movement speed : 7kmph
60 km east-northeast of Puduchery.
Forward sector of spiral bands entered land
இதையும் படிங்க : ஃபெஞ்சல் புயல்: கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரடி விசிட்; களநிலவரங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவு : "ஃபெஞ்சல் புயலானது தற்போது மகாபலிபுரம் கல்பாக்கம் கரையோரத்தில் உள்ளது. கல்பாக்கம் - செய்யூர் கரையோரத்தில் மையம்கொண்டு நாளை காலை கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் நேரத்தில், மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் செய்யூர் மற்றும் பாண்டிச்சேரி பகுதி முழுவதும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது" என பதிவில் கூறியுள்ளார்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியார் வானிலை ஆர்வலர்கள் ஆகியோர் வெளியிட்டுள்ள தகவல்களில் வித்தியாசம் இருப்பதால் மக்கள் குழப்பத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.