சென்னை: மகளின் கண் முன்னே, மனைவி மற்றும் மாமனார் ஆகியோரை இரட்டைக் கொலை செய்தவருக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த சென்னை மகிளா நீதிமன்றம், அதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில், கணவரைப் பிரிந்து தனது மகள் ரிஸ்வானாவுடன் வசித்து வந்த கவுஸ் யுனிசா, அப்துல்காதர் என்பரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்கு ரேஷ்மா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அப்துல்காதர், தன் சகோதரியின் மகனுக்கு ரிஸ்வானாவை மணமுடித்த நிலையில், அவர் கணவருடன் சண்டைபோட்டு பிரிந்து வந்ததற்கு, தன் மனைவி கவுஸ் யுனிசா தான் காரணம் எனக் கூறி அப்துல்காதர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் கணவரைப் பிரிந்த கவுஸ் யுனிசா தன் மகள்களுடன், தந்தை முசாபர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து, மகள் ரேஷ்மாவைக் காண அப்துல்காதர் அங்கு அடிக்கடி சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மகள் ரேஷ்மாவைக் காண கவுஸ் யுனிசாவும், அவரின் தந்தை முசாபரும் தடுப்பதாகக் கூறி, மனைவியையும், மாமனாரையும் மதுபாட்டில், குக்கர் ஆகியவற்றால் தாக்கியதுடன், கத்தியால் குத்தி, அப்துல்காதர் இரட்டை கொலை செய்துள்ளார்.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஜாம் பஜார் காவல் நிலையத்தில் பதிவான வழக்கை, சென்னை சென்ட்ரல் அருகே அல்லிக்குளம் வணிக வளாகத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்ட மகிளா சிறப்பு நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி T.H.முகமது பாருக் விசாரித்தார். அப்போது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் B.ஆரத்தி ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த மார்ச் 1ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் மனைவி, மாமனார் ஆகியோரை கொலை செய்த அப்துல் காதருக்கு இரு கொலை பிரிவுகளில் தலா ஒரு ஆயுள் தண்டனை விதித்து, அதை ஏக காலத்தில் அனுபவிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அப்துல் காதருக்கு 21 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதில் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம், தாயை இழந்த ரிஸ்வானா பாத்திமா, ரேஷ்மா பாத்திமா ஆகியோருக்கு வழங்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில், மகளின் கண்முன்னே மனைவி மற்றும் மாமனார் ஆகியோரை இரட்டை கொலை செய்தவருக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவை தனியார் பள்ளிக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்; பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சம்