சென்னை: வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனர் டாக்டர்.அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் ‘பேமிலி கிளினிக்’ மருத்துவ மையத்தினை துவக்கி வைத்தனர்.
பின்னர், நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், “குடும்ப கிளினிக்கை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் சமுதாயத்திற்கான சேவை அர்ப்பணிப்பை நாங்கள் உறுதி செய்கிறோம். வடபழனி பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள் அனைத்திற்கும் விரிவான மற்றும் சிறப்பான மருத்துவ சேவைகளை எளிய கட்டணத்தில் வழங்குவது இதன் நோக்கம். முதல் கிளினிக் போரூரில் ஆரம்பிக்கப்பட உள்ளது” என்றார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவேரி மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி பூமாசந்திரன், “தற்பொழுது குடும்ப மருத்துவர் என்ற முறை இல்லாமல் இருக்கிறது. எனவே, குடும்ப மருத்துவர் இருந்தால், அவர் நோயாளி குறித்து தெரிந்திருக்கும் நிலையில், அவருக்கு சிறப்பு மருத்துவர்களை தேவையான நேரத்தில் பரிந்துரைப்பர்.
விரிவான சிகிச்சை: நோயாளிகளின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக காவேரி குழுமம் பேமிலி கிளினிக் தொடங்கியுள்ளது. இவை சமுதாயத்திற்கு எண்ணற்ற பலன்களை வழங்கும். சிறார்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயது பிரிவுகளையும் சேர்ந்தவர்களுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் விரிவான சிகிச்சைகளை இது அளிக்கிறது.
குறித்த கால அளவுகளில் உடல்நலப் பரிசோதனைகள், தடுப்பூசி மருந்துகள் மற்றும் நோயறிதலுக்கான ஸ்கிரீனிங் சோதனைகள் போன்ற முன்தடுப்பு சுகாதார சேவைகள், நோய்கள் வராமல் தடுப்பதற்கும் மற்றும் ஆரம்ப நிலையிலேயே பாதிப்பு நிலைகளை கண்டறிவதற்கும் முதன்மையான வழிமுறைகளாக இங்கு இருக்கும். மேலும், நீரிழிவு, மிகை ரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமா போன்ற நாள்பட்ட தீவிர நிலைகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும்.
சிறப்பு நிபுணர் ஆலோசனை: காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கிளினிக் செயல்படும். ரூ.200 என்ற மிகக்குறைவான கட்டணத்தில் மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசனையை வழங்கும். குடும்பத்திலுள்ள அனைத்து வயது பிரிவிலும் உள்ள நோயாளிகளுக்கு தனிப்பட்ட சிகிச்சையையும், பராமரிப்பையும் வழங்கும்.
குடும்பத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் தேவைப்படுகின்ற கவனிப்பையும், சிகிச்சையையும் பெறுவதை உறுதி செய்வதுடன், தேவைப்படுமானால் குடும்ப மருத்துவரால் பரிந்துரைக்கப்படும்போது, கூடுதல் கட்டணங்களின்றி சிறப்பு நிபுணர், சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் நிபுணரைச் சந்தித்து மருத்துவ ஆலோசனையைப் பெற முடியும்.
காவேரி மருத்துவமனையில் உயர் சிகிச்சை பெற வரும் போது அங்கும் கட்டணச் சலுகை அளிக்கப்படும். மத்திய அரசு அனைத்து நோயாளிகளின் மருத்துவப் பதிவேட்டையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றம் செய்வதால் நோயாளியின் வரலாற்றை அறிவதும் எளிதாகும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாம் தமிழர் கட்சியுடன் அதிமுக கூட்டணியா? ஈபிஎஸ் ரியாக்ஷன் என்ன?