சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பீர்க்கன்காரணை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை அடுத்து போலீசார் பெருங்களத்தூர் ரயில் நிலையம் சென்று பார்த்தபோது அங்கு அதிக அளவில் கூட்டம் இருந்துள்ளது.
அதில் சந்தேகத்திற்கிடமான வகையில் தனியாக நின்று கொண்ட ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அந்நபர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அந்த நபரை மடக்கி பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர் வெங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜய் கருப்பு (வயது 23) என்பதும், இவரிடம் கஞ்சா வாங்குபவருக்கு போதை மாத்திரை இலவசம் என விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இவரது கூட்டாளியான இரும்புடையூர் பகுதியை சேர்ந்த வெங்கட் (எ) வெங்கடேசன் (29) என்பவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவையும், 30 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மாமூல் கேட்டு கடையை அடித்து நொறுக்கும் கும்பல்: சென்னை ராயப்பேட்டை மீர்சாகிப்பேட்டை மார்கெட் பெசன்ட் சாலையில் மன்சூர் என்பவர் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு இந்த கடைக்கு போதையில் வந்த மூன்று பேர் சிகரெட் மற்றும் உணவு வாங்கிவிட்டு, கடையின் வெளியே நின்றிருந்த சில நபர்கள் மீது உணவை துப்பி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் இந்த சம்பவம் கைகலப்பாக மாறிய நிலையில், போதையில் இருந்த அந்த கும்பலிடம் சிகரெட் மற்றும் உணவு பொருட்களுக்கான பணத்தை கடை ஊழியர்கள் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரத்தில் அந்த கும்பல், என்னிடமே பணம் கேட்கிறாயே? நீ தான் பணம் கொடுக்க வேண்டும் எனக்கூறி கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு கடை உரிமையாளர் மன்சூரை என்பவரை தாக்கிவிட்டு தப்பியோடியது.
இதனைத் தொடர்ந்து கடையின் உரிமையாளர் மன்சூர் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த அசோக் மற்றும் ராகுல் என்பது தெரியவந்ததை அடுத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இருவர் மீதும் ஏற்கனவே ஜாம்பஜார் காவல் நிலையத்தில் வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அந்த கும்பல் டீக்கடையில் பொருட்களை நொறுக்கி, உரிமையாளரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயின்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு.. நாமக்கல்லில் நடந்தது என்ன? - Namakkal Girl death