சென்னை: சென்னை வடபழனியில் மொபைல் சர்வீஸ் கடையில் வேலை செய்து வந்தவர், ஊர்மிள் எஸ்.டோலியா. இவர் கடையில் வியாபாரம் சரிவர நடக்காமல் இருந்துள்ளது. இந்த நிலையில், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு தேனாம்பேட்டையில் உள்ள தன்னுடைய வீட்டிலிருந்து, இரவு தன்னுடைய 4 வயது இளைய மகன் மாதவ்வை அழைத்துக் கொண்டு மொபைல் கடைக்குச் சென்று, யாரும் இல்லாத நேரத்தில் சிறுவனைக் கொன்று, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும், கணவரும், மகனும் வீட்டிற்கு திரும்பாததால், டோலியாவின் மனைவி கலைச்செல்வி, கணவர் வேலை செய்யும் மொபைல் சர்வீஸ் கடையின் மேனேஜருக்கு போன் செய்து தகவல் கேட்டறிந்தபோது, கடையினுள் சிறுவனும், டோலியாவும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். பின்னர், இருவரையும் ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது, சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், மற்றொருவர் பிழைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஊர்மிள் எஸ்.டோலியா மீது வடபழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். கொலைச் சம்பவம் குறித்து ஜார்ஜ் டவுனில் உள்ள 16வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி புவனேஸ்வரி முன் வழக்கு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.
அரசுத் தரப்பில் ஆஜரான குற்றத்துறை வழக்கறிஞர் டி.மகாராஜன், 21 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டதில், ஊர்மிள் எஸ்.டோலியா தான் குற்றவாளி என ஆதராத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதற்கு, குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் ஜாமீன் கோரப்பட்டது.
நீண்ட நாட்களாக விசாரணையில் இருந்து வந்த இந்த வழக்கில் நீதிபதி வழங்கிய தீர்ப்பில், “ஊர்மிள் எஸ்.டோலியா என்பவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆனதால் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும்” விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், அபராதத்தை செலுத்தத் தவறினால் 1 ஆண்டு சாதாரண சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றார். ஜாமீன் கோரி ஊர்மிள் எஸ்.டோலியா தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி புனவேஸ்வரி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை! - LIQUID NITROGEN In Food Items