சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா ராஜன், சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன் 12) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை கணக்கெடுப்பது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சென்னை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களை வெறிநாய்க்கடி பாதிப்பிலிருந்து காத்திடவும் ஆலோசனை நடைபெற்றது.
வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநாகராட்சியை உருவாக்கிடவும் சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை, கால்நடை மருத்துவ பிரிவு ஆகியவற்றின் சார்பில் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி, அகப்புற ஒட்டுண்ணி நீக்க மருந்துகள் செலுத்தும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல, பொதுமக்களும் தங்களுடைய செல்லப் பிராணிகளை பொது இடங்களுக்கு எடுத்து செல்லும்போது கழுத்துப்பட்டையுடன் சங்கிலி இல்லாமல் அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும். செல்லப்பிராணிகளை வளர்ப்போர் அதிகம் கவனம் செலுத்தி மற்றவர்களுக்கு தங்களுடைய செல்லப் பிராணிகளால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் அக்கறை கொண்டு, சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுற்றி திரியும் தெருநாய்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் முக்கிய அம்சமாக, வேல்ட் ஒய்ட் (world wide) கால்நடை சர்வீஸ், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி சென்னை மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பு பணி இன்று (ஜுன் 12) தொடங்கி இரண்டு மாத காலத்தில் முடிக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி சுகாதார துறை கூடுதல் ஆணையர் டாக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, கால்நடை சேவை நிறுவன இயக்குனர்கள் டாக்டர் கேர்லட் பெர்னாண்டஸ், நைஜீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.