சென்னை: சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் போட் கிளப் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் முகுந்த். தொழிலதிபரான இவர் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள வெட்டுவாங்கனியில் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
தற்போது இவரது தொழிற்சாலையில் நஷ்டம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக மன உளைச்சலிலிருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு இவர் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள மூன்றாவது தளத்தின் பால்கனிலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த முகுந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், அபிராமிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தற்கொலை செய்து கொண்ட முகுந்தின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் அதிரடி வேட்டை: சென்னை காவல் ஆணையர் உத்தரவின்படி, மேற்கு மண்டல அதிதீவிர குற்ற தடுப்புப்பிரிவு அதிகாரிகள், ரவுடிகளை தீவிரமாக கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நேற்றிரவு விருகம்பாக்கம் பகுதியில் உள்ள பாழடைந்த பங்களா ஒன்றில் பதுங்கி இருந்த 12 ரவுடிகளை போலீசார் ஆயுதங்களுடன் கைது செய்தனர். பின்னர், விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் வடசென்னை ரவுடியான உமர் பாஷாவின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உமர்பாஷா வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், அவரை கொலை செய்தவர்களைப் பழிதீர்க்கும் நோக்கில் பதுங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே இந்த கொலை வழக்கில் நாகூர் கனி என்பவரை இந்த கும்பல் கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. தற்போது இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணம் பறிக்க முயன்ற நபர் கைது: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நந்தன் கிஷோர் என்பவர் தங்கம் வாங்குவதற்கு ரூ.32 லட்சத்துடன் ரயிலில் பயணம் செய்து சென்னைக்கு வந்துள்ளார். அப்போது ரயிலில் பயணித்த நபர் ஒருவர் தான் வருமான வரித்துறை அதிகாரி எனவும், கொண்டு செல்லும் பணத்தில் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் உங்களை விட்டு விடுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சுதாரித்துக் கொண்ட நந்தன் கிஷோர் இது குறித்து ரயில் நிலையத்தில் இறங்கி ஓடி உள்ளார். அப்போது அவரிடம் அதிகாரி என கூறிய நபரும் பின் தொடர்ந்து வந்துள்ளார். தொடர்ந்து, நந்தன் கிஷோர் ஆட்டோவில் ஏறிச் செல்ல முயன்றுள்ளார். அப்பொழுது அந்த நபர் பின் தொடர்ந்ததால், நந்தன் திருடன் திருடன் என கூச்சலிட, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த சேத்துப்பட்டு போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட சாதுக்கள்.. கல் மற்றும் கட்டையால் தாக்கியதால் தி.மலை கிரிவல பாதையில் பரபரப்பு! - Sadhus quarrel in Girivalam