தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் இருந்து இலங்கைக்கு சாரஸ் (Charas) மற்றும் கேட்டமைன் (Ketamine) உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்துவருவதாக தருவைக்குளம் கடலோர காவல் நிலைய ஆய்வாளர் பேச்சிமுத்துவிற்கு
தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை தொடர்ந்து பேச்சிமுத்து தலைமையிலான காவல்துறையினர் முறப்பநாடு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முறப்பநாட்டை சேர்ந்த துரைப்பாண்டி என்பவரது வீட்டை சோதனை செய்ததில் அங்கு இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ சாரஸ் என்ற போதைப்பொருள் மற்றும் 5 கிலோ கேட்டமைன் என்ற போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: "நாளை முதல் பணிக்கு திரும்பும் சாம்சங் தொழிலாளர்கள்.. சிஐடியு கூட்டத்தில் முடிவு"
இதையடுத்து துரைப்பாண்டியை கைது செய்த கடலோர காவல் நிலைய போலீசார் சர்வதேச மதிப்பில் ரூபாய் 30 கோடி மதிப்பிலான 50 கிலோ சாரஸ் மற்றும் ஐந்து கிலோ கேட்டமைன் ஆகிய போதைப்பொருளை பறிமுதல் செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர். பின் கடலோர காவல் நிலைய போலீசார் கைபற்றிய போதைப்பொருட்களை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பிடிப்பட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்