சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி, டெல்லியில் விலை உயர்ந்த 50 கிலோ போதைப்பொருள் கடத்திய விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிஃபர் ரகுமான் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய மூவரும் மத்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்ட மூவரிடமும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியது. அதன் அடிப்படையில், கடந்த மூன்று ஆண்டுகளாகச் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களைத் தேங்காய் பவுடர்கள் ஏற்றுமதி எனக் கூறிக் கடத்தியது தெரியவந்தது.
மேலும், இந்தப் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய நபராகச் செயல்பட்டது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுகவின் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பதும், அவரின் சகோதரர்களான மொய்தீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்தே ஜாபர் சாதிக் போதைப்பொருட்களைத் தொடர்ந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதனை அடுத்து, மத்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், சென்னை மண்டலப் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து விசாரணையை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், ஜாபர் சாதிக் தலைமறைவான காரணத்தால், அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி, அவரின் வீட்டில் சம்மன் ஒன்றை ஒட்டிச் சென்று இருந்தனர்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் மற்றும் அவரின் சகோதரர்கள் வீட்டில் மத்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், சுமார் 8 மணி நேரம் சோதனை நடத்தியதில், முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றியதாகத் தகவல் வெளியாகியது.
மேலும், அன்று (பிப்.28) இரவு அவரது வீட்டில் நோட்டீஸ் ஒன்றை ஒட்டிய மத்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வீட்டிற்குச் சீல் வைத்து விட்டுச் சென்றனர். மேலும், அவரது செல்போன் இணைப்புகளை வைத்துத் தொடர்ந்து அதிகாரிகள் அவரை தேடி வருவதுடன், அவருடன் யார் தொடர்பில் உள்ளார்கள் என்பதையும் மத்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கும் மற்றும் துறைமுகங்களுக்கும் டெல்லி மத்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஜக அழைப்பு விடுத்தது உண்மைதான்.. ஆனால் நான்.. திவ்யா சத்யராஜ் பிரத்யேக பேட்டி!