சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையக் ஆலோசனைக் கூட்டம், மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் நேற்று (மார்ச் 05) நடைபெற்றது. அப்போது மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள், உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அடையாள அட்டை என மொத்தம் 181 பயனாளிகளுக்கு ரூ.21.51 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பீட்டர் அல்போன்ஸ் வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், "சிறுபான்மையின மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கும், அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து நலத்திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்திடவும் சிறுபான்மையினர் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
சிறுபான்மையினர் மக்களுக்கு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம், விலையில்லா மிதிவண்டிகள் வழங்குதல். வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்குதல்.
மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரங்கள், கிராமப்புற கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற எண்ணற்ற திட்டங்களைத் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
கைவிடப்பட்ட முஸ்லீம் மகளிர் நலனுக்காக மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் மூலம் சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இச்சங்கங்கள் திரட்டும் நிதி ஆதாரத்திற்கேற்ப ஒரு சங்கத்திற்கு அதிகபட்சமாக ஆண்டிற்கு ரூ.20 இலட்சம் வரை இணை மானியம் அரசால் வழங்கப்படுகிறது.
மேலும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையின மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திடத் தனி நபர் கடன், சிறு வணிகக் கடன் மற்றும் கல்விக் கடன் ஆகியவை குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே சிறுபான்மையின மக்களை மரியாதையோடும், வழிநடத்தும் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக திமுக உறுப்பினர் ஒருவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். அதே போன்று விசிகவிலும் ஒருவர் நீங்கப்பட்டார்.
ஆனால் ஆதினத்தை மிரட்டி 20 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியவர்கள் பாஜகவில் உள்ளனர்,அவர்கள் மீது பாஜக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என கேள்வி எழுப்பினார். மேலும் போதை பொருட்களை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு மத்திய அரசுக்கு உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!