தூத்துக்குடி: தூத்துக்குடி பெருமாள்புரத்தை சேர்ந்தவர் சீனி முகமது (27). இவர் நெல்லையில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று வேலை முடிந்து பேருந்தில் தூத்துக்குடிக்கு வந்துள்ளார். பின்னர் அவர் இரவு 11:30 மணி அளவில் மார்க்கெட் சிக்னல் அருகே வந்த போது இரண்டு பைக்குகளில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 15 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து சீனி முகமது மத்திய பாகம் போலீசில் புகார் அளித்தார்.
இதேபோல் தூத்துக்குடி வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் சுபிலேசன் (24). இவர் எட்டயபுரம் ரோட்டில் உள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். இந்நிலையில், சுபிலேசன் அதிகாலை 3:30 மணியளவில் பயிற்சி வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்தியால் தாக்கி அவரிடம் இருந்த 10,000 மதிப்பிலான செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.
இதே கும்பல் அதிகாலை 4 மணியளவில் சக்தி விநாயகர் புரத்தை சேர்ந்த சீனி பகதூர் என்ற குர்காவை தாக்கி அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து வடபாகம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், தூத்துக்குடி தெர்மல் நகர், பண்டுகரை சாலை, புதியம்புத்தூர் விலக்கு ஆகிய பகுதிகளிலும் அடுத்தடுத்து செல்போன் பறிப்பு கும்பல் கைவரிசை காட்டியுள்ளது.
இது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகர மற்றும் புறநகர் போலீசாரை உஷார் படுத்தினார். டிஎஸ்பி (பொறுப்பு) பொன்னரசு தலைமையில் டவுன் தனிப்படை ஏட்டுகள் சாமுவேல், மகாலிங்கம், முத்துப்பாண்டி, திருமணிராஜன், செந்தில் ஆகிய போலீசார் சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை தேடி வந்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் கும்பலின் அடையாளம் தெரிந்தது.
இதையடுத்து தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனியை சேர்ந்த இசக்கி முத்து தொம்மை (26), சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவா (22), முனியசாமி கோயில் தெருவை சேர்ந்த சேது ராஜா (19), மற்றும் மாரிசெல்வம் (19), ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து ஏழு செல்போன்கள் இரு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான இசக்கி முத்து போலீசாரின் பிடியிலிருந்து தப்பி ஓடும்போது தவறி விழுந்ததில் அவரது கை உடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் 2: தூத்துக்குடி பொட்டல்காடு பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் (24), இவர் நேற்று முன்தினம் இரவு அத்திமரப்பட்டி ரோட்டில் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அவரை வழிமறித்த வாலிபர், மகேஷ்குமாரிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.
அப்போது அவர் கீழே தவறி விழுந்ததில் கை எலும்பு முறிந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் செல்போன் பறித்த போது தவறி விழுந்தவர் சத்யாநகரை சேர்ந்த பொன்ராஜ் மகன் ஜெகன் என்ற ஜெகன் ராஜ் (21), என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் 3: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட அண்ணாநகரை சேர்ந்த புவனேஷ் குமார் (20), நெல்லை பேரின்பபுரத்தை சேர்ந்த பிரவீன்ராஜா, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (23) ஆகியயோரை கைது செய்தனர். இதில் புவனேஷ் குமார் (20), தப்பியோடும் போது தவறி விழுந்ததில் அவர் கை உடைந்தது. விசாரணையில் இந்த ஒட்டுமொத்த கும்பலும் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.
தூத்துக்குடியில் நேற்று முன்தினம் ஒரே நாள் இரவில் 7 செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதால் பொது மக்கள் கடும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட 8 பேரையும் போலீசார் கோட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மீண்டும் கள்ளச்சாராய விற்பனை.. கள்ளக்குறிச்சியில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!