கரூர்: கரூர் மாநகரப் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து கோவை சாலை வரை எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இதனால் இங்குள்ள பெட்ரோல் நிரப்பும் மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை சாலை பிரேமஹால் அருகே அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்குச் சொந்தமான பெட்ரோல் நிரப்பும் மையம் ஒன்றில் நேற்றைய முன்தினம் (ஜூன் 12) இரவு 11.30 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் சிலர் மது போதையில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு பணம் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு பெட்ரோல் நிரப்பும் மையத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் சேர்ந்து, பணம் செலுத்தி விட்டு பெட்ரோல் மையத்திலிருந்து வெளியேற வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனையடுத்து, மது போதையில் இருந்த இளைஞர்கள் பெட்ரோல் நிரப்பும் மையத்தில் பணியாற்றும் ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ஊழியர் ஒருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பெட்ரோல் நிரப்பும் மையத்தின் உரிமையாளர் ரஞ்சித், கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் ஊழியர்களை, மது போதையில் வந்த இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோவில், ஊழியர் ஒருவரை அடித்து கீழே தள்ளி கழுத்தில் மிதிப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும், தடுக்க முயன்ற ஊழியர்களையும் கடுமையாக தாக்கியுள்ளது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.5 கோடி செலவில் புதுப்பொலிவு பெறும் அம்மா உணவகங்கள்.. சென்னை மாநகராட்சி அதிரடி!