நீலகிரி: நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகேயுள்ள வுட்கோட் குடியிருப்பு பகுதியில் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை துப்பாக்கியால் சுடும் நபரின் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நாயின் உரிமையாளர் உட்பட பலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக குன்னூர் நகர காவல் நிலைய போலீசார் நேரில் சென்று சம்பவம் நடந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி வளர்ப்பு நாயை தாக்கிய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் துப்பாக்கி மூலம் வளர்ப்பு நாயை சுட்டது அதே பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் எனும் நபர் என்று தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, ஜேம்ஸிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் பயன்படுத்திய துப்பாக்கி விளையாட்டுக்கு பயன்படுத்தக்கூடிய காற்றழுத்த துப்பாக்கி (Air Gun) என்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவரிடமிருந்து பயன்படுத்திய துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், வளர்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய நபரும் வளர்ப்பு நாய் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.