சென்னை: நுங்கம்பாக்கம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக இருப்பவர் ஆனந்த பாபு. இவர் இதற்கு முன்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
அப்போது, சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், அவருக்கு சொந்தமான நிலத்தை அபகரித்துக் கொண்ட நபர்களுக்கு சாதகமாக காவல்துறை செயல்பட்டதாகவும், அதில் நீலாங்கரை காவல் ஆய்வாளராக இருந்த ஆனந்த்பாபு ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டதாகவும், இது குறித்து புகார் அளித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் கார்த்திக் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரணை நடத்தி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும், நான்கு மாதங்களில் சிபிஐ சிறப்பு குழு ஒன்றை அமைத்து காவல்துறை மீது உள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று சென்னையில் சிபிஐ அதிகாரிகள் காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபுக்கு தொடர்புடைய நான்கு இடங்களில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையார் சாஸ்திரி நகர் பகுதியில் ஒரு வீட்டிலும், பெசன்ட் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிலும், சோழிங்கநல்லூரில் உள்ள தமிழ்நாடு வாழ்வுரி மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் உள்ள வீட்டிலும், வேளச்சேரி நேரு நகர் பகுதியில் உள்ள வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிபிஐ அதிகாரிகளின் இந்த சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு முகாந்திரம் இருந்தால் அவரிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண் டிஎஸ்பி-யிடம் சீரிய இளைஞருக்கு மாவு கட்டு... காட்டுக்குள் பதுங்கியவரை தூக்கிய தனிப்படை..!