வேலூர்: திமுக சார்பில் வேலூர் நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வேலூர் பாகாயம், ஓட்டேரி, விருப்பாச்சிபுரம், உள்ளிட்ட பகுதிகளுக்கு வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப் பட வேண்டும். நாகப்பட்டினத்தில் சிலிண்டர் விநியோகம் செய்யக்கூடிய நிறுவனங்களில் பணம் பட்டுவாடா நடைபெற்றதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இது, தேர்தல் நடத்தை விதிகளை மீறப்படுவது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இது குறித்து நாகப்பட்டின மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளோம். இது குறித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை ஒரு ஜனநாயக முறையாக நடத்துவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "1974ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருக்கும் போது கட்சி தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது. இன்றைக்கு கச்சத்தீவு பற்றி பேசும் பிரதமர் கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்டு இருக்கலாமே. பத்தாண்டுகளில் கச்சத்தீவை மீட்காமல், இன்று அது குறித்துப் பேசுவது மலிவான முறையில் வாக்குகளைப் பெறும் மோசமான முறையாகும்.
இத்தகைய பிரச்சாரத்தின் மூலமாக மக்களின் வாக்குகளைப் பெற்று விட முடியாது. ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை, வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் செலுத்தப்படும், விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதி, தொழிலாளர்களுக்குக் கொடுத்த வாக்குறுதி, மீனவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என எதனையும் நிறைவேற்ற வில்லை.
மாறாக மக்களுக்குக் கடவுள் மேல் இருக்கிற பக்தி, மதத்தின் மீதுள்ள நம்பிக்கையை வைத்து வாக்கு சேகரிக்க முயற்சி செய்கிறார். அந்த முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். நள்ளிரவு கூட்டணி மற்றும் கள்ளக் கூட்டணி ஆகியவற்றை மட்டும்தான் மக்கள் நிராகரிப்பார்கள்" எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து இயக்குநர் அமீரை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துள்ளது குறித்து கேட்ட போது, "தேர்தலுக்காக மோடி அரசு எதை வேண்டுமானாலும் செய்யும். குஜராத்திலிருந்து தான் போதைப்பொருட்கள் இறக்குமதியாகி இந்தியா முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது என்பது பிரதமர் மோடி உட்பட அனைவருக்கும் தெரியும். அதைத் தடுத்து நிறுத்தினால் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கலாம்" என பதிலளித்தார்.
வணிகர் சிலிண்டருக்கு ரூ.30 குறைத்துள்ளது குறித்து கேட்ட போது, "வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ.410-ல் இருந்து ரூ.1200-க்கு உயர்த்தி விட்டு, 100 ரூபாய் குறைத்துள்ளனர். அதேபோல் 10 நாட்களுக்கு முன்பு வணிகர் சிலிண்டரை விலை ஏற்றிவிட்டு, தற்போது விலை குறைத்துள்ளனர். தேர்தலுக்காக விலையைக் குறைத்து, வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்கிற நப்பாசையில்தான் இதையெல்லாம் செய்கின்றனர். ஆனால் இதற்கு மக்கள் ஏமாற மாட்டார்கள்" எனக் கூறினார்.
திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை விமர்சித்து மோடி தனது X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது குறித்து கேட்தற்கு, "பிரதமர் மோடி எதிர்க்கட்சியே இருக்க கூடாது என்று நினைக்கிறார். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.11 கோடியும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ.15 கோடியும் அபராதம் விதித்துள்ளனர்.
எல்லா கட்சிகளையும் முடக்கிவிடலாம் என்கிற எண்ணத்தில் தான் இப்படி செயல் படுகிறார். இது அவருடைய அகம்பாவத்தின் உச்சம். இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களும் எனது குடும்பம் என பிரதமர் மோடி கூறுகிறார். முதலில் அவர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழட்டும். சொந்த மனைவியுடன் வாழ முடியாத மனிதர் 140 கோடி மக்களையும் தனது குடும்பம் என கூறுவதற்கு என்ன அருகதை உள்ளது" என கடுமையாகச் சாடினார்.
இதையும் படிங்க: "கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பிரதமருடன் போட்டி போட யாரும் இல்லை" - கோவையில் அண்ணாமலை பேச்சு