திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என 1,000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்த பாளையங்கோட்டை சிறையில் சாதி ரீதியாக கைதிகளுக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்படுவதும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
எனவே, பாளையங்கோட்டை சிறையில் சாதி ரீதியாக கைதிகள் பிரிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட, கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு கைதி காயமடைந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, சிறைத்துறை டிஐஜி பழனி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தி பாதுகாப்பை பலப்படுத்தினார். இந்நிலையில், நேற்று (மே 16) உணவு வாங்குவதற்காக வரிசையில் நிற்கும் போது கைதிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த பேரின்பராஜ் என்ற கைதிக்கும், சக கைதியான முக்கூடல் அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், ராஜகோபால், தூத்துக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற கைதிகள் உணவு வாங்குவதற்காக வரிசையில் நிற்கும்போது, யார் முதலில் வாங்குவது என்ற அடிப்படையில் கைதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாகத் தெரிகிறது. இதனையடுத்து, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும் தெரிகிறது.
இத்தகவலறிந்த சிறை வார்டன், உடனடியாக உணவருந்தும் கூடத்திற்குச் சென்று கைதிகளை விலக்கி விட்டு சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர், சிறைத்துறை கண்காணிப்பாளர் முனியாண்டி, சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரித்ததாகவும், அதன் அடிப்படையில் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த புகாரின் அடிப்படையில், கைதிகள் பேரின்பராஜ், மணிகண்டன், சந்தோஷ் மற்றும் ராஜகோபால் மீது பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: “என்னைப் பற்றி பிறர் பேசுவதில் நான் கவனம் செலுத்துவதில்லை” - இளையராஜா! - Ilayaraja Vs Vairamuthu