வேலூர்: திமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதை வீடியோ எடுத்து ஆதாரத்துடன் வெளியிட்டதால், திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், இன்று (ஏப்.17) நாதக வேட்பாளர் மகேஷ் ஆனந்த் வீட்டின் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், ஓட்டுக்கு பணம் வழங்கியதாக திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக்கோரி, மகேஷ் ஆனந்த் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். இந்நிலையில், பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டதாக ஐந்து திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. இதனை முன்னிட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அந்தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களின் இறுதிகட்ட பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத் தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வேலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் மகேஷ் ஆனந்த், வேலூர் தொகுதியில் திமுக மற்றும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது புகார் அளித்துள்ளார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலூர் அடுத்த அலமேலு ரங்கா புரத்தில், திமுக கவுன்சிலர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்த், அவர் பணம் வழங்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் பணம் பட்டுவாடா செய்வதை வீடியோ எடுத்து ஆதாரத்துடன் வெளியிட்டதால், திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் சிலர், இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்த் தங்கி இருக்கும் ரங்காபுரம் பகுதியில் இருக்கும் வீட்டின் அருகே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்களை வீடியோ எடுத்த செல்போனையும் உடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்த், நடைபெறவிருக்கும் தேர்தலுக்காக பொதுமக்களுக்கு 1000 மற்றும் 2000 ரூபாய் பணம் பட்டுவாடா செய்து வரும் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக்கோரி, வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சுப்புலட்சுமியிடம் மனு அளித்தார்.
மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறியிருந்தனர். இதையடுத்து, விஏஓ அளித்த புகாரின் அடிப்படையில் பணம் பட்டுவாடாவில் ஈடுபட்ட ஐந்து திமுகவினர் மீது சத்துவாச்சாரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.